×

நகராட்சி ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தி போராடியவர் கைது

தேனி, ஆக.20: தேனி நகராட்சி ரோடுகளில் தோண்டப்பட்ட பகுதிகளை உடனே சீரமைக்க வலியுறுத்தி போராடியவர் கைது செய்யப்பட்டார். இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் விசாகன். இவர் நேற்று காலை தேனி என்.ஆர்.டி., ரோட்டோரம் மூகாம்பிகை கோயிலுக்கு எதிரே தனி நபராக அமர்ந்து போராட்டம் நடத்தினார். கையில் தேனியில் தோண்டப்பட்ட ரோடுகளை சீரமைக்க வேண்டும்’ என்று எழுதப்பட்ட பதாகை வைத்திருந்தார். தகவல் அறிந்து வந்த தேனி போலீசார் இவரை கைது செய்தனர். விசாகன் கூறுகையில், தேனியில் பல கோடி ரூபாய் செலவில் ரோடு அமைத்துள்ளனர். ரோடு அமைக்கப்பட்ட சில தினங்களிலேயே குழாய் அமைப்பது உட்பட பல்வேறு காரணங்களை காட்டி தோண்டிப்போட்டுள்ளனர். தோண்டப்பட்ட ரோடுகளை மீண்டும் சீரமைக்கவில்லை. இதனால் நகர் பகுதியில் அனைத்து ரோடுகளும் சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த ரோடுகளை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நான் மறியல் செய்யவில்லை. யாரையும் துன்புறுத்தவில்லை. மக்களுக்கு எந்த இடையூறும் செய்யவில்லை. ரோட்டோரம் அமர்ந்து தனிநபராக கோஷம் மட்டும் எழுப்பினேன். இதற்காக கைது செய்துள்ளனர் என்றார்.

Tags :
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு