அரசு சார்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல்

சிவகங்கை, ஆக.20: அரசு சார்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும் திட்டத்தில் தென்னை விவசாயிகள் பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. சிங்கம்புணரியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் 450 மெ.டன் அரவைக் கொப்பரை மற்றும் 50 மெ.டன் பந்துக் கொப்பரை என மொத்தம் 500 மெ.டன் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கான கொள்முதல் விலை அரவைக் கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.95.21 எனவும், பந்துக்கொப்பரைக்கு ரூ.99.20 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளால் வழங்க வேண்டிய கொப்பரையின் தரம் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வைக்கோல், தூசு, நார் போன்ற அயல்பொருட்கள் அதிகபட்சம் ஒரு சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும். பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை, சுருக்கம் கொண்ட கொப்பரை மற்றும் சில்லு கொப்பரை ஆகியவை அதிகபட்சம் 10சதவீதம் மட்டுமே இருக்கலாம். இதன் ஈரப்பதம் அதிகப்பட்சம் 7 சதவீதம் இருக்கலாம், சுற்றளவு குறைந்தபட்சம் 75 மி.மீ இருக்க வேண்டும். அயல்பொருட்கள் 0.2 சதவீதம், பூஞ்சாணம், கருமை நிறம் கொண்ட கொப்பரை ஆகியவை அதிகப்பட்சம் 2 சதவீதம் மட்டுமே இருக்கலாம். சுருக்கம் கொண்ட கொப்பரை அதிகபட்சம் 10 சதவீதம், சில்லுகள் அதிகபட்சம் 1சதவீதம் இருக்கலாம். விவசாயிகள் தங்களது சிட்டா, பயிர்சாகுபடி அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக விபர நகல்களுடன் சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பதிவு செய்து தங்களது கொப்பரையினை ஒப்படைக்கலாம். இக்கொள்முதல் பணி 6.1.2020 வரை மேற்கொள்ளப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தென்னை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :
× RELATED ‘கிளீன்’ ஆகிறது வைகை ஆறு கருவேலம்...