மாவட்டத்தில் பரவலாக மழை திருப்புவனத்தில் அதிகபட்சம் பதிவு

சிவகங்கை, ஆக.20:  சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 904.7மி.மீ ஆகும். ஆனால் கடந்த 2008ம் ஆண்டிற்கு பிறகு ஆண்டுதோறும் சீரான அளவில் மழை பெய்யவில்லை. 2008 முதல் 2017ம் ஆண்டு வரை இடைப்பட்ட 9 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2008ம் ஆண்டு 1283 மி.மீ மழை பெய்ததே அதிகமான அளவாகும். 2012ம் ஆண்டு 549 மி.மீ மழை பெய்ததே இந்த 9ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவில் பெய்த மழை அளவாகும். 2009ம் ஆண்டு 772மி.மீ, 2010ம் ஆண்டு 916மி.மீ, 2011ம் ஆண்டு 872மி.மீ, 2013ம் ஆண்டு 705மி.மீ மழை பெய்தது. 2014ம் ஆண்டு 920மி.மீ மழை பதிவாகியுள்ளது. 2015ம் ஆண்டில் 1097மி.மீ, 2016ம் ஆண்டு 706.5மி.மீ மழை பெய்துள்ளது. 2017ம் ஆண்டு 976.6மி.மீ மழை பதிவாகியுள்ளது. 2018ம் ஆண்டு 924.4மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஆண்டுதோறும் தென் மேற்கு பருவமழை 309.6மி.மீ, வடகிழக்கு பருவமழை 413.7மி.மீ சராசரியாக பெய்ய வேண்டும்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் வெறும் 54.94மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது மிகக்குறைவான அளவாகும். இந்த ஆறு மாத காலக்கட்டத்தில் ஆண்டு சராசரியில் குறைந்தபட்டசம் மூன்றில் ஒரு பங்கு மழை பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் முற்றிலும் மழை பெய்யாமல் போனது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் திருப்புவனத்தில் கன மழை கொட்டியது. இங்கு ஆக.17ல் 90.4மி.மீ, ஆக.18ல் 168.6மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளில் திருப்புவனத்தில் பெய்த அதிகபட்ச மழையாகும். கடந்த இரண்டு நாட்களில் தேவகோட்டையில் 78.2மி.மீ, காளையார்கோவிலில் 61.4மி.மீ, சிங்கம்புணரியில் 20.5மி.மீ, சிவகங்கையில் 17.2மி.மீ, மானாமதுரையில் 15.6மி.மீ, திருப்பத்தூரில் 12மி.மீ, காரைக்குடியில் 11மி.மீ, இளையான்குடியில் 7மி.மீ, மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழைய்துள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: இந்த ஆண்டு தான் நீண்ட காலத்திற்கு பிறகு கடந்த ஆறு மாதங்களாக குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட எந்த நீர் நிலைகளிலும் முற்றிலும் நீர் இல்லாமல் போனது. இந்த ஆண்டு கோடை மழை முற்றிலும் இல்லை. தென் மேற்கு பருவமழை காலத்தில் சில பகுதிகளிலாவது கன மழை பெய்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெய்யும் மழையால் வெப்பம், குடிநீர் பிரச்சினை உள்ளிட்டவை சரி செய்யப்படும். தொடர்ந்து கன மழை பெய்தால் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து விவசாய பணிகளுக்கு உதவும் என்றனர்.


Tags :
× RELATED காரைக்குடியில் பட்டா கத்தியுடன் ரவுடிகள் ரகளை