இளையான்குடி வட்டாரத்தில் நெல் விதைப்பு பணி மும்முரம்

இளையான்குடி, ஆக. 20:  இளையான்குடி வட்டாரத்தில் மழை பெய்து வருவதையடுத்து நெல் விதைப்பு பணி மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இளையான்குடி வட்டாரத்தில் அ.திருவுடையார்புரம், இளையான்குடி, தாயமங்கலம், சாலைக்கிராமம், சூராணம் ஆகிய வருவாய் பிர்காக்களுக்கு உட்பட்ட கிராமங்களில் விவசாயமே முதன்மையான தொழில். கடந்த ஆண்டு இந்த பகுதியில் சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் விவசாயம் சாகுபடி செய்யப்பட்டது. போதிய மழையின்மை, வறட்சி, நோய் தாக்குதல் ஆகிய காரணங்களால் பாதியளவு மட்டுமே நெல்லில் மகசூல் பெறப்பட்டது. கடந்த ஆண்டு தவறவிட்ட நெல் மகசூலை, நடப்பாண்டில் எப்படியாவது  கூடுதல் மகசூல் பெற வேண்டும் என, இளையான்குடி வட்டார விவசாயிகள் மும்முரமாக, விவசாயப் பணிகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டனர்.

ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்து தேதி மூன்றாகிவிட்டதால், இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதியில் உள்ள விவசாயிகள், என்எல்ஆர், ஜேசிஎல், ஏடிடி 45, ஆடுதுறை, குட்டை சம்பா, உட்பட குறைந்த கால அளவுடைய நெல் ரகங்களை வாங்கி, நெல் விதைப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே நிலத்தை உழுது பண்படுத்தி வைத்திருந்த விவசாயிகள், கடந்த நான்கு நாட்களாக மிதமான மழை பெய்து வருவதாலும்,  இனிவரும் நாட்கள் மழை காலம் என்பதாலும் தற்போது நெல் விதைப்பு பணியை  ஆர்வத்துடன் ஆரம்பித்துள்ளனர்.

Tags :
× RELATED சிவகங்கை அருகே கிடப்பில் சாலை பணி: அவதியில் கிராமமக்கள்