×

கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் கட்டிடம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு எச்சரிக்கை போர்டு வைத்ததால் பரபரப்பு

பரமக்குடி, ஆக.20:  தெளிச்சத்தநல்லூர் கிராமத்தில் கண்மாய் நீர் பிடிப்பு பகுதியில் கட்டுமான பணியை நிறுத்த வேண்டி பொதுமக்கள் முற்றுகையிட்டு, எச்சரிக்கை போர்டு வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பரமக்குடி அருகே உள்ள தெளிச்சத்தநல்லூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 250 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் தெளிச்சத்தநல்லூர், மணிநகர், சோமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். நாளடைவில் வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்ததாலும், போதிய மழை இல்லாததால் கண்மாய் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகள் தூர்வாராமல் இருந்தது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ரியல் எஸ்டேட் கம்பெனிகள் போலி தனமாக பத்திரப்பதிவு செய்து வீட்டுமனைகளான மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதுபற்றி கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கிராமத்தினர் சார்பாக கடந்த 15 ஆண்டுகளாக புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கிராமத்தினரை மீறி தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யக் கூடாது மீறி பத்திரப்பதிவு நடந்தால் போராட்டம் வெடிக்கும் என கிராமத்தினர் சார்பாக நோட்டீஸ் அடித்து ஒட்டினார்கள்.

இதுகுறித்த செய்தி கடந்த ‘தினகரன் நாளிதழில்’ வெளியானது. இதைத் தொடர்ந்து கலெக்டர் மற்றும் இடம் குறித்த விசாரணை செய்து மனுதாரர்களுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டும் பரமக்குடி வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இந்த நிலையில் தனியார் உணவு கடை சார்பாக நீர் பிடிப்பு பகுதியில் கடை கட்டுவதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது. இதை தெரிந்து கொண்ட கிராமத்தினர் 20க்கும் மேற்பட்டவர்கள் கட்டிடப் பணிகளை தடுக்கும் விதமாக கட்டுமான நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர். பின்னர் இந்த இடம் ‘கிராமத்திற்கு பாத்தியப்பட்ட கண்மாய் நீர்பிடிப்பு பகுதி’ என எழுதி விளம்பர பலகை வைத்தனர். இந்த தகவல் தெரிந்து வந்த இடத்தின் உரிமையாளர் மற்றும் கிராமத்தினருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த பகுதியில் கண்மாய் பகுதிகள் அனைத்தும் தனியார் நிறுவனத்தினர் வாங்கியுள்ளனர். இந்த இடங்கள் நீர்பிடிப்பு பகுதியாக இருப்பதால் பத்திரப்பதிவு செய்ய
அரசு அனுமதி அளிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை