மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தில் சிதைந்த மண்டபங்களை சீரமைப்பது எப்போது?

மதுரை, ஆக. 20: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீயில் சிதைந்த மண்டபங்களை சீரமைக்கும் பணி ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. 6 மாதத்திற்குள் சீரமைக்கப்படும் என அமைச்சர்களின் அறிவிப்பு காற்றில் பறந்தது. இதனால், கோயிலைக் காண வரும் பக்தர்களும், ஆயிரம் கால்மண்டபத்தை காணவரும் சுற்றுலாப் பயணிகளும் வேதனை அடைகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2018 பிப்.2 இரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுவாமி சன்னதி கிழக்கு கோபுர வாயில் அருகே உள்ள வீரவசந்தராயர் மண்டபம் இடிந்தது. ஆயிரங்கால் மண்டபம் மற்றும் அதன் அருகே உள்ள கலைத்தூண்கள், மேற்கூரைகளில் சிதைவு ஏற்பட்டது. தீயில் சிதைந்த பகுதிகளை 6 மாதத்தில் சீரமைக்கப்படும் என அரசு சார்பில் அமைச்சர்கள் அறிவித்தனர். சிதைந்த மண்டபத்தில் தூண்கள் மற்றும் இடிபாடுகள் அகற்றப்பட்டன. ஆனால், சீரமைப்பு பணி இன்னும் தொடங்கப்படவில்லை. சீரமைப்பு பணிக்கு அரசு சார்பில்  நிதி ஒதுக்கப்படும் என முதலில் அமைச்சர்கள் தெரிவித்தனர். பின்னர், கோயில் நிர்வாகம் நிதி ஒதுக்கும் என கூறி கைவிரித்து விட்டனர்.

 இந்நிலையில், ஓராண்டாக மூடி வைக்கப்பட்ட கிழக்கு கோபுர வாசல், 6 மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டாலும், அந்த வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதன் அருகில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் சேதமில்லை என்றாலும், சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க முடியாத நிலை உள்ளது. ஏனென்றால், அதன் பிரதான வாயில் வழியாக செல்ல முடியாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது.  

தீ விபத்து ஏற்பட்டு ஒன்றரை ஆண்டைக் கடந்தும்,  சீரமைப்பு பணி தொடங்காமல், இடிபாடுகள் மட்டும் அகற்றப்பட்டுள்ளன. இதில், அரசும், கோயில் நிர்வாகமும் அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. சீரமைப்பு பணிக்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகில் உள்ள குவாரி கல் பயன்படுத்த தொழில்நுட்ப வல்லுனர் குழு 10 மாதங்களுக்கு முன்பே ஒப்புதல் அளித்துவிட்டது. ஆனால், இன்னும் அந்த கல் கொண்டு வந்து சேர்க்கப்படவில்லை.

 இது குறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கல்லுக்காகதான் சீரமைப்பு பணி காத்திருக்கிறது. கல் வந்து சேர்ந்ததும் பணி தொடங்கும்’ என்றார். ஆனால், எப்போது பணி ஆரம்பமாகும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் எதுவும் தெரிவிக்காமல் மவுனம் சாதிக்கின்றனர். கோயிலில் சிதைவுகள் சீரமைக்கப்படாததை கண்டு பக்தர்களும், சுற்றுலா பயணிகளும்  வேதனை அடைகின்றனர்.

குடமுழுக்கு வரை இழுத்தடிப்பா?

மீனாட்சி அம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறுவது உண்டு. இதன்படி வருகிற 2021ல் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதோடு சேர்த்து சிதைந்த பகுதிகளை சீரமைக்க திட்டமிட்டு இழுத்தடிக்கப்படுகிறதா? என்ற கேள்வி பக்தர்களிடம் எழுந்துள்ளது.

Related Stories: