பால் விலை உயர்வால்ஓட்டல்களில் காபி, டீ விலை கூடியது பொதுமக்கள் அதிருப்தி

மதுரை, ஆக. 20: பால் விலை உயர்வால் கடைகள் மற்றும் ஓட்டல்களில் டீ, காபி விலையை ரூ.2 முதல் 5 வரை  உயர்த்தியுள்ளனர். இதனால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை நேற்று முதல் அரசு உயர்த்தியுள்ளது. ஆவின் பால் பாக்கெட்டில் அச்சாகி இருந்த பழைய விலைக்கு பதில், புதிய விலையை அச்சடித்து விற்பனை செய்தனர். குழந்தைகள், முதியோர்களின் முக்கிய உணவுப் பொருளாக பால் உள்ளது. அத்தியாவசியப் பட்டியலில் முதலிடம் உள்ள பாலின் விலையை உயர்த்தியது, சாமானிய மக்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடைகள், ஓட்டல்களில் டீ, காபி விலை ரூ.2 முதல் ரூ.5 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த நெய், வெண்ணெய், ஸ்வீட் உள்ளிட்ட பால் பொருட்களையும் கூடுதல் விலைக்கு கடைக்காரர்கள் விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை நகருக்குள் மட்டுமே 3 ஆயிரத்திற்கும் அதிக டீ, காபி கடைகள் இருக்கும் நிலையில் நகர், புறநகரின் அனைத்து கடைகளிலுமே நேற்று அதிகாலை முதல் டீ, காபி விலையை உயர்த்திவிட்டனர். இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.   இது குறித்து ஓட்டல்கள் சங்க தலைவர் டெம்பிள்சிட்டி குமார் கூறுகையில், ‘பொதுவாக அனைத்து ஓட்டல்களிலும் ஆவின் பால்தான் பயன்படுத்தி வருகிறோம். இந்த விலை உயர்வை சமாளிக்கும் வகையில், விலையேற்றம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: