மேலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட வேண்டும்

மேலூர், ஆக. 20: மேலூர் நீதிமன்றங்களில்  இடப்பற்றாக்குறையால் பொதுமக்கள், வக்கீல்கள் அவதிப்படுகின்றனர். எனவே, ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலூரில் சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் என 3 நீதிமன்றங்கள், ஆங்கிலேயர் கால கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன. இதில், குற்றவியல் நீதிமன்றம் தனியாகவும், மற்ற இரண்டு நீதிமன்றங்கள் ஒரே கட்டிடத்திலும் செயல்பட்டு வருகின்றன. வழக்குகளின் பெருக்கம் காரணமாக, பொதுமக்களின் வருகையும் அதிகமாக உள்ளது. இதனால், நீதிமன்ற கட்டிடங்களில் நெரிசல் ஏற்படுகிறது. கடந்த 10 ஆண்டாக, பகுதி நேர நீதிமன்றமாக செயல்பட்டு வந்த, மேலூர் சார்புநீதிமன்றம் கடந்த 4 மாதத்திற்கு முன்பு நிரந்தர சார்பு நீதிமன்றமாக மாற்றப்பட்டது. இதனால், இங்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப குடிநீர், கழிப்பறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இலலி. குற்றவியல் நீதிமன்றத்திலும் இதே நிலைதான் உள்ளது. 3 நீதிமன்றங்களையும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டினால் பொதுமக்கள், வக்கீல்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறுவர். எனவே, மேலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மேலூர் வக்கீல் சங்க முன்னாள் தலைவர் ஜெயராமன் கூறுகையில், ‘இதுவரை பகுதி நேரமாக செயல்பட்ட சார்பு நீதிமன்றம் கடந்த ஏப்.27 முதல் நிரந்தர நீதிமன்றமாக மாறிவிட்டது. இதற்கென தனி இடம் இல்லாததால், பழைய நீதிமன்ற கட்டிடத்தின் ஓர் அறையில் செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கூடுகின்றனர். இவர்களுக்கு உட்கார போதிய இடம் இல்லை. நீதிபதி அழைக்கும்போது உடனடியாக செல்ல முடியவில்லை. பெண்களுக்கு கழிப்பறை, ஓய்வறை இல்லை. எனவே, மேலூரில் 3 நீதிமன்றங்களும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில், ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை கட்ட அரசு நிதி ஒதுக்க வேண்டும். இதனால் பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் மிகுந்த பயன் பெறுவர்’ என்றார்.

Related Stories: