வெடி அதிர்வால் விரிசலாகும் வீடுகள்

திண்டுக்கல், ஆக. 20: கல்குவாரி வெடியால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றும், வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும் கொத்தப்புள்ளி மக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். ரெட்டியார்சத்திரம் அருகே கொத்தப்புள்ளியை சேர்ந்த பொதுமக்கள் இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் ரவிபாலன் தலைமையில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்து விட்டு அவர்கள் கூறியதாவது, ‘கொத்தப்புள்ளியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கல்குவாரி செயல்படுகிறது. இந்த குவாரியில் அடிக்கடி வெடி வைப்பதால் பொதுமக்கள் வீடுகளில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. வெடியின் அதிர்வினால் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. வெடி மருந்தின் வாசம் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகளும், முதியவர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெடி வைத்ததில் கற்கள் சிதறி சின்னதாதன்பட்டியை சேர்ந்த கன்னியம்மாள் (55) காயமடைந்தார். இந்த கல்குவாரியை மூட கோரி பல மாதங்களாக அதிகாரிகளிடம் மனு அளித்து வருகிறோம். ஆனால யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபற்றி கேட்க சென்றால் குவாரி ஆட்கள், பொதுமக்களை தாக்குகின்றனர். எனவே கலெக்டர், கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.

Related Stories: