இந்திராகாந்தி கல்லூரி சார்பில் அரசு ஆதிதிராவிடர் பள்ளிக்கு தானியங்கி நாப்கின் எந்திரம் வழங்கல்

திருச்சி, ஆக.20: திருச்சி மதி இந்திராகாந்தி கல்லூரி சார்பில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மின் எரிப்பான் எந்திரம், தானியங்கி நாப்கின் எந்திரம் நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீனா தலைமை வகித்து பேசுகையில், மாணவிகள் பொறுப்புடனும், கடமை உணர்வுடனும் செயல்பட்டு கல்வியில் சாதனை புரிந்து சுகாதாரம் பேணி வாழ்வில் வளம் பெறுவதுடன், சமுதாயத்திற்கு தொண்டாற்றும்போது தன்னை அர்ப்பணித்துக் கொள்ளுதல் அவசியம் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்திராகாந்தி கல்லூரி நன்கொடையாக வழங்கிய மின் எரிப்பான் எந்திரம் மற்றும் தானியங்கி நாப்கின் எந்திரத்தை பள்ளிக்கு வழங்கினார். அவர் பேசுகையில், ‘‘கல்வி, சுகாதாரம் இரண்டும் மாணவிகளுக்கு மிகவும் அவசியம்’’ என்றார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவதாஸ், ஸ்கோப் இயக்குனர் சுப்புராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.கல்லூரி முதல்வர் வித்யாலெட்சுமி வரவேற்றார். அரசு ஆதி திராவிடர் நலத்துறை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.

Related Stories: