மணப்பாறை நகராட்சி குப்பைகிடங்கில் தீ விபத்து

மணப்பாறை, ஆக.20: மணப்பாறை நகராட்சி குப்பைக்கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.திருச்சி மாவட்டம், மணப்பாறை சந்தைப்பேட்டை அருகே நகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு, நகர பகுதிகளில் உள்ள 27 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பிடித்து எரிவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தால் தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கு மேலும், பரவ தொடங்கியது. தகவலறிந்து வந்த மணப்பாறை தீயணைப்பு வீரர்கள் குப்பை மேட்டில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் முழுவதும் தீர்ந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் தண்ணீர் கேட்டபோது தண்ணீர் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், தீயனைப்பு பணியை மேற்கொள்ளவில்லை என தீயணைப்பு வீரர்கள் குற்றம் சாட்டினர். இந்த தீ விபத்தால் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தீ எரிந்து கொண்டிருந்த நேரத்தில் லேசான மழை பெய்ததால் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் வந்தது. ஆனாலும், புகை வந்த இடங்களில் ஆங்காங்கே மீண்டும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புகை மூட்டம் அதிகமாக இருந்தது.

Related Stories: