மாநகராட்சி வெளியிட்ட தரைக்கடை வியாபாரிகள் சங்க வாக்காளர் பட்டியலில் குளறுபடி மறு ஆய்வு செய்ய கோரிக்கை

திருச்சி, ஆக.20: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆர்டிஓ சாந்தியிடம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் பழனிசாமி அளித்த மனுவில்,திருச்சி மாநகராட்சி ரங்கம் கோட்டம், தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தேர்தலுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. அந்த பெயர் பட்டியலின்படி சுமார் 2,568 பேர் தரைக்கடை வியாபாரிகள் என்று குறிப்பிட்டுள்ளனர். இப்பட்டியலில் சுமார் 2,000 பேருக்கு மேல் முகவரிகள் குறிப்பிடவில்லை. மேலும் 1,000 பேருக்கு மேல் தந்தை பெயரும் இல்லை. அதனால் இப்படியல் பெரும் சந்தேகத்துக்கு உட்பட்டுள்ளது. ஆளுங்கட்சி மற்றும் பெரு வணிக நிறுவனங்கள் போலியான நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இடம் பெறச் செய்துள்ளது தெரியவருகிறது.

இதனால் தேர்தலில் போட்டியிட்டு வென்றுவிட்டால் எங்களில் உண்மையான தரைக்கடை வைத்திருப்பவர்களை அப்புறப்படுத்த நடக்கும் சதியே என்று தெரிகிறது. சரியான பெயர், முகவரி இல்லாததால் எங்களால் முறையாக தேர்தலுக்கு தயார் செய்ய இயலாத வாக்கு கேட்க முடியாத நிலை உள்ளது. பெயர் பட்டியலில் உள்ள பெரும்பான்மையானவர்களுக்கு இன்னும் அடையாள அட்டை கொடுக்கவில்லை. அவசர கதியாக இப்பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆகவே முறையாக தணிக்கை செய்து இப்பெயர் பட்டியலை மறு ஆய்வு செய்ய வேண்டும். சரியான வாக்காளர் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும். மேலும் அடையாள அட்டை வழங்கி அதன்பின் தேர்தல் நடத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இதேபோல திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனிடமும் இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: