விமானப்படை தளத்துக்கு உள்ளே போடப்பட்டுள்ள தார் சாலையை ராணுவத்தினர் அடைத்ததால் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறோம் குறைதீர் கூட்டத்தில் இனாத்துகான்பட்டி மக்கள் மனு அரசு ஆவணங்களை ஒப்படைக்க முடிவு

தஞ்சை, ஆக. 20: விமானப்படை தளத்துக்கு உள்ளே போடப்பட்டுள்ள தார்ச்சாலை ராணுவத்தினர் அடைத்துள்ளதால் இனாத்துகான்பட்டி பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதாக தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசு ஆவணங்களை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.தஞ்சை அருகே இனாத்துகான்பட்டி கிராம மக்கள் அளித்த மனு: தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை சாலை செல்லும் பகுதியில் இனாத்துக்கான்பட்டி கிராமம் உள்ளது. இதன் அருகே உள்ள இந்திய விமானப்படை தளத்துக்கு 1995ம் ஆண்டு எங்களது 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் எடுக்கப்பட்டது.மேலும் இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் இருந்து தஞ்சைக்கு சென்று வந்த தொடர்வழி சாலையை 2011ம் ஆண்டு அடைத்து விமான ஓடுதளம் அமைக்கப்பட்டது. அப்போது கலெக்டரும், விமானப்படை அதிகாரிகளும் விமானப்படை தளத்துக்கு உள்ளே போடப்பட்டுள்ள தார் சாலையை கிராம மக்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதித்தனர். இந்நிலையில் கடந்த 16ம் தேதியிலிருந்து இந்த பாதையை ராணுவத்தினர் அடைத்துவிட்டனர்.இதனால் எங்களது பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகள், வேலைக்கு செல்ல வேண்டியவர்கள் வெளியே செல்ல முடியாமல் கிராமத்திற்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம். மேலும் உடல்நிலை சரியில்லாமல் போனால் கூட மருத்துவமனைக்கு செல்ல ஆட்டோ, ஆம்புலன்ஸ் ஆகியவற்றை கிராமத்துக்குள் அழைக்க முடியவில்லை. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஜனநாயக நாட்டில் இந்த இனாத்துக்கான்பட்டி கிராமத்துக்கு மட்டும் ராணுவ ஆட்சியா அல்லது மக்களாட்சியா என்பது தெரியாமல் தத்தளிக்கிறோம். இதுவரை நாங்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட சாலையை மீண்டும் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அனைவரும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் ஒரத்தநாடு திமுக எம்எல்ஏ ராமச்சந்திரன் தலைமையில் இனாத்துக்கான்பட்டி கிராமவாசிகள் உடனடியாக இப்பகுதி மக்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டுமென டிஆர்ஓ சக்திவேலிடம் வலியுறுத்தினர். இதையடுத்து டிஆர்ஓ சக்திவேல், பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதுகுறித்து கலெக்டர் மற்றும் விமானப்படை தள அதிகாரிகளிடம் பேசி நல்ல தீர்வு காண்பதாக தெரிவித்தார்.இலவச வீட்டுமனை பட்டா வேண்டும்: இந்திய தேசிய மாதர் சம்மேளன ஒன்றிய செயலாளர் கண்ணகி, ஒன்றிய தலைவர் ரங்கநாயகி, பொருளாளர் லதா உள்ளிட்டோர் அளித்த மனு: குடியிருக்க வீட்டுமனை இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்தவாறு பட்டா இல்லாமல் வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும். பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் சமூக அநீதிகளை தடுக்க வேண்டும். அதற்கு துணைபோகும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியோர் உதவித்தொகை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்யும் பயனாளிகளின் வங்கி கணக்கு முடக்கம் மற்றும் கல்விக்கடன், விவசாய கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாத விவசாய கூலி தொழிலாளியின் வங்கி கணக்கை முடக்கும், கந்துவட்டி கடை போல் மிரட்டி வசூல் செய்யும் செங்கிப்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகத்தை கண்டிப்பது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முழுமை பெறாத தூர்வாரும் பணி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் ராம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் அளித்த மனுவில், காவிரி கோட்டம் கோணக்கடுங்கலாறு பிரிவு பூவரசன் வாய்க்காலில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வார ரூ.17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.கடந்தாண்டு துவங்கப்பட்ட இப்பணி முழுமை பெறாமல் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் 1,000 ஏக்கர் நீர் ஆதாரம் பெற வேண்டிய விவசாய நிலங்களுக்கு நீர் பாசனம் கிடைக்கவில்லை. 5 கி.மீ. தூர வாய்க்கால் அரைகுறையாக தூர்வாரப்பட்டது. 25 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளன. இதனால் வாய்க்கால் மேடு, திட்டுகள், செடி, கொடிகள் மண்டி காணப்படுகிறது. ஒன்பத்துவேலி பகுதியில் அமைந்துள்ள வாய்க்கால் தலைமதகு, அதைதொடர்ந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கரை பலவீனமாக உள்ளதை சீர்படுத்த வேண்டும். ரூ.17 லட்சத்தில் ரூ.6.5 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையையும் செலவிட்டு பணிகள் முழுமையாக நடக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாதாள சாக்கடை சுத்திகரிப்பு சேமிப்பு கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்: தஞ்சை மேலவெளி ஆபிரகாம் பண்டிதர் நகர், வடக்கு தெருவை சேர்ந்த செல்வகுமார், ஜெகன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். பள்ளிகள், ரேஷன் கடை உள்ளது. இங்கு பாதாள சாக்கடை மூலம் வரக்கூடிய கழிவுநீரை சுத்திகரிக்கும் கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது.இதனால் இங்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. எனவே இதை ஊருக்கு அப்பால் அமைத்தால் மக்களை தொற்று நோயிலிருந்து காப்பாற்றலாம்.எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு சேமிப்பு கிடங்கை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பேராசிரியர்கள் பற்றாக்குறைஒரத்தநாடு அருகே உள்ள தர்மாம்பாள் ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் அளித்த மனுவில், நாங்கள் பயிலும் கல்லூரியில் கடந்த ஒரு மாதமாக வகுப்புகள் சரிவர நடைபெறவில்லை. இதற்கு போதிய பேராசிரியர்கள் இல்லாததே காரணம். பருவ தேர்வுகள் நெருங்கிவிட்டது. இதனால் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே வகுப்புகள் சரிவர நடைபெற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கல்லணை கால்வாயில் 4,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்

விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையிலான விவசாயிகள் அளித்த மனுவில், கடந்த 8 ஆண்டுகளாக குறுவையை இழந்துள்ள விவசாயிகள் ஒருபோகம் சாகுபடி செய்யலாம் என இருந்த நிலையில் கல்லணை கால்வாயில் வெறும் 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் எந்த பயனும் இல்லை. குறைந்தபட்சம் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி திறக்க வேண்டும். மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்தாண்டை போல் கொள்ளிடத்தில் திறந்தால் கடலில் வீணாக போய் சேரும். எனவே தான் உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து குறைந்தபட்சம் 20 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும். இதேபோல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது விதை நெல் கூட வாங்க வழியின்றி உள்ளனர். அவர்களுக்கு உடனடியாக பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோஷம் எழுப்பினர்.

Related Stories: