×

திருந்திய நெல் சாகுபடி முறையில் 40 % வரை தண்ணீர் மிச்சப்படுகிறது வேளாண் அதிகாரி தகவல்

புதுக்கோட்டை, ஆக.20: திருந்திய நெல்சாகுபடி முறையில் 40 சதவீதம் வரை தண்ணீர் மிச்சப்படுகிறது என வேளாண் அதிகாரி கூறியுள்ளார்.புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தற்போது விவசாயிகள் சம்பா பருவ நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். சம்பா நெல் சாகுபடிக்கு ஆடுதுறை 49, ஆடுதுறை 39, சி.ஆர் 1009 மற்றும் டி.கே.எம் 13 போன்ற உயர் விளைச்சலை ரகங்களை சாகுபடி செய்யலாம். திருந்திய நெல் சாகுபடி முறையில் விவசாயிகள் இருக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நெல் சாகுபடி செய்யலாம். திருந்திய நெல் சாகுபடி முறையில் 40 சதவீதம் வரை நீர் மிச்சப்படுத்தப்படுகிறது. சீரான இடைவெளி, அதிக தூர்கட்டும் திறன், பூச்சி நோய் மற்றும் எலி தாக்குதல் குறைவு. நெல் மணிகளின் எண்ணிக்கை மற்றும் மணிகளின் எடை அதிகரித்தல் போன்ற நன்மைகள் கிடைக்கிறது. எனவே, திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்வதால் வழக்கமான முறையில் நெல் சாகுபடியில் கிடைப்பதை விட கூடுதல் மகசூல் கிடைக்கும். திருந்திய நெல் சாகுபடி முறையில், ஒரு ஏக்கர் நடவு செய்ய 2 கிலோ விதை போதுமானது. ஒரு ஏக்கர் நடவு செய்ய ஒரு சென்ட் நாற்றங்கால் மட்டும் போதுமானது. 14 நாட்கள் வயதான இளம் நாற்றுக்களை நடவு செய்வதால் அதிக தூர்கள் பிடிக்கும். குத்துக்கு ஒரு நாற்று வீதம் சதுர முறையில் நடவு செய்ய வேண்டும். வயலில் 2.5 சென்டி மீட்டருக்கு அதிகமாக நீர் நிறுத்த தேவையில்லை. இதனால் நீர் தேவை பெருமளவு குறைகிறது.

கோனாவீடர் என்ற களையெடுக்கும் கருவியினைக் கொண்டு நடவு செய்த 10-ம் நாள் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை வீதம் நான்கு முறை வயலில் குறுக்கும் நெடுக்குமாக ஓட்டி களைகளை மண்ணிலேயே அமிழ்த்தி இயற்கை உரமாக மாற்றுவதோடு மண்ணை கிளறி விடுவதால் தூர்கள் அதிகம் பிடித்து மகசூல் கூடுகிறது. இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தேவையான தழை சத்தை மேல் உரமாக இடுவதால் உர தேவையினையும் குறைக்கலாம். எனவே திருந்திய நெல் சாகுபடி முறையினை புதுக்கோட்டை வட்டார விவசாயிகள் நடப்பு சம்பா பருவத்தில் கடைபிடித்து குறைந்த தண்ணீர் மற்றும் குறைந்த செலவில் கூடுதல் மகசூல் பெறலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு புதுக்கோட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா