×

அமராவதி அணையில் இருந்து குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கொத்தப்பாளையம் தடுப்பணை வந்தது

அரவக்குறிச்சி, ஆக. 20: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரமும், 4047 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவும் உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 72.5 அடி உயரம் உள்ளது. இந்த அணையின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 54 ஏக்கரும், 17 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அரவக்குறிச்சி வட்டத்தில் 30க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் அமராவதி பாசன விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தற்போது வாழை, சூரியகாந்தி, மஞ்சள், பருத்தி, சோளம், கம்பு போன்ற பணப் பயிர்கள் பயிரிடுகின்றனர்.

அமராவதி ஆற்று நீரை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். மேலும் கடும் வறட்சியின் காரணமாக நீர்நிலைகள் வற்றியது. ஆழ்குழாய் மற்றும் விவசாயக் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாமல் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. போதுமான தண்ணீர் இருந்தும் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாமலிருந்தது. இதனால் அரவக்குறிச்சி பகுதி அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் பாலைவனம் போல வறண்டு காணப்பட்டது.கரூர் மாவட்டத்தில் குடி நீர் தட்டுப்பாட்டை போக்கவும், பொதுமக்கள் மற்றும் பல்வேறு பொது அமைப்பினர் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அமராவதி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்த காரணத்தால் அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது. இதனால் 14ம் தேதி முதல் 2 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது.இந்த தண்ணீர் நேற்று காலை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கொத்தப்பாளையம் தடுப்பணையை கடந்து கரூர் நோக்கி செல்கின்றது.. குடிநீருக்காக திறக்கப்பட்டாலும் விவசாயத்திற்கும் பயன் பெறும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...