டாஸ்மாக் கடையினால் பள்ளி செல்ல அச்சம்

திருப்பூர், ஆக.20:திருப்பூர், விஜயாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையினால் பள்ளி செல்ல அச்சம் ஏற்பட்டுள்ளதாக பள்ளி மாணவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர், விஜயாபுரம் அடுத்த அங்காளம்மன் கோயில் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைய அகற்ற கோரி மாணவர்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர். ஆனால், கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினார்கள். இதனால், அதிருப்தி அடைந்த பள்ளி மாணவ, மாணவிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர், உள்ளே அனுமதிக்கப்பட்டு கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

திருப்பூர், விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூறியதாவது: நாங்கள் முத்தணம்பாளையம் அடுத்த ஆயமரம் பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் பள்ளி இல்லாததால் நாங்கள் விஜயாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றோம். இப்பள்ளிக்கு, செல்ல எங்கள் பகுதியில் இருந்து பஸ் வசதியில்லை. ஆகையால், நாங்கள் 30 மாணவிகளும், மாணவர்களும் அங்காளம்மன் கோவில் வழியாக 8 கி.மீ  நடந்து சென்று வருகிறோம். அவ்வழியில் கடந்த ஒன்றை ஆண்டுகளாக டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மது அருந்துபவர்கள் நடந்து செல்லும் போது கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இத்தகைய, சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை அருகில் கொடூர கொலை நடந்தது. இதனால், இப்பகுதியில் நடந்து செல்ல எங்களுக்கு மிகவும் அச்சமாக உள்ளது. ஆகையால், இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும். மேலும், ஆயமரம் பகுதியில் இருந்து முத்தணம்பாளையம் பகுதிக்கு செல்ல பஸ் வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Related Stories: