கீழ்பவானி பாசன கால்வாயில் விநாயகர் சிலைகளை கரைக்க விவசாயிகள் எதிர்ப்பு

திருப்பூர், ஆக.20:திருப்பூர், கீழ்பவானி பாசன கால்வாயில் விநாயகர் சிலைகளை கரைக்க கூடாது என கீழ்பவானி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து கீழ்பவானி விவசாயிகள் நல சங்கம் தலைவர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கீழ்பவானி பாசனம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடம் பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கீழ்பவானிப் பாசன கால்வாய் 35 மைல் பயணித்து கரூர் மாவட்டத்தில் முடிகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் இதன் மூலம் பாசனம் பெற்று வருகிறது. இந்நிலையில், சதுர்த்தி விழாவின் போது விநாயகர் சிலைகளை ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பாசன கால்வாய்கள் கரைப்பதில்லை. ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாசன பயனாளிகளின் எதிர்ப்பையும் மீறி பாசன கால்வாயில் சிலைகள் கரைக்கப்பட்டது.

இதனால், பாசன நீர் மாசு பட்டதோடு மட்டுமல்லாமல் உடைக்கப்பட்ட சிலைகளின் பாகங்கள் கால்வாய் நீரில் உருண்டோடி மதகு குழாய்களை அடைத்த காரணத்தால் நீர் நிர்வாகம் பாதிக்கப்பட்டது. நீர் தேங்கி கரை உடையும் சூழ்நிலையும் உருவானது. கீழ்பவானி தலைமை கால்வாய்களின் அருகில் நொய்யல் ஆறு ஓடுகிறது. இப்படி இருக்கும்போது விநாயகர் சிலைகளை புனித தன்மை கொண்ட ஜீவநதியாக மாற்றப்பட்டிருக்கும் நொய்யல் ஆற்றில் கலக்காமல் எதற்காக கீழ்பவானி பாசன கால்வாய் கரைக்க வேண்டும். ஆகஸ்ட்16ம் தேதி கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் எதிர்ப்பையும் மீறி நடந்த தவறு நடப்பு ஆண்டில் நடத்தி விடக்கூடாதே எந்த சூழ்நிலையும் விநாயகர் சிலைகளை கால்வாய் நீரில் கரைப்பதற்கு நடப்பு ஆண்டில் பாசன பயனாளிகள் விடமாட்டார்கள். எனவே, நொய்யல் ஆற்றில் விநாயகர் சிலை கரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: