ஸ்மார்ட் சிட்டி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் அனைத்துக் கட்சியினர் வலியுறுத்தல்

திருப்பூர், ஆக.20:ஸ்மார்ட் சிட்டி குறித்து திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம்  வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அனைத்துக் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.  இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ரவி தலைமையில் மாநகராட்சி உதவி ஆணையர் சந்தானத்திடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பொலிவுறு நகரம் திட்டத்தின்படி பிரதான சாலைகளில் பள்ளிக் கட்டடங்கள், பொது பயன்பாட்டுக் கட்டடங்கள், குடிநீர் தொட்டிகள், குடியிருப்புகளை அகற்றி இடித்து விட்டு வணிக வளாகங்கள், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், பூங்கா போன்றவற்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய நிலையில் திருப்பூர் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், பல அடுக்கு வாகன நிறுத்தம், வணிக வளாகங்கள் அமைத்தால் மாநகரின் மத்தியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் வளர்ச்சித் திட்டங்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது சரியல்ல. இதில், பல்வேறு தவறுகளும், முறைகேடுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பொலிவுறு நகரம் திட்டங்கள் என்ன என்றும், மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதைத்தொடர்ந்து, எம்எல்ஏக்கள்,எம்.பிக்கள்மற்றும் அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தைக் கூட்டி எடுக்கப்படும் நடவடிக்கைகளின் அடிப்படையில் பொலிவுறு நகரம் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மனுவில், பலமடங்கு உயர்த்தப்பட்ட சொத்து வரியை ரத்து ெசய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் அளிப்பின்போது, காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன், திமுக மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சி வடக்கு நகர செயலாளர் முருகேஷ், மதிமுக மாநகர செயலாளர் சிவபாலன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: