110 ஏக்கர் பரப்பிலான குளத்தை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

காங்கயம், ஆக.20: காங்கயம் அருகே 110 ஏக்கர் பரப்பிலான கத்தாங்கண்ணி குளத்தை சுற்றிலும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் மழை வெள்ளம் வந்தும் பயனில்லாமல் போனது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியம் பாலசமுத்திரம்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கத்தாங்கண்ணி குளம் 110 ஏக்கர் பரப்பில் உள்ளது. இதில் தண்ணீர் தேக்கினால், கத்தாக்கன்னி, வயக்காட்டு புதூர், ரெட்டிபாளையம், கணபதிபாளையம், தம்மரெட்டிபாளையம், சாவடிபாளையம், புதூர், ரசப்பாளையம் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும், 200 ஏக்கர் நேரடி பாசனம் பெறும் பகுதிகளாக உள்ளது. ஒரத்துப்பாளையம் அணை கட்டும் முன்பு வரை, நொய்யலில் வரும் தண்ணீர் கத்தாங்கன்னி குளத்தில் தேக்கி நெல், வாழை என விவசாயம் செழுமையாக நடைபெற்று வந்தது. திருப்பூரிலிருந்து வரும், சாய, சாக்கடை கழிவு நீர் காரணமாக, 20 ஆண்டுக்கு முன் தடுப்பணை உடைக்கப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயமும் செய்ய முடியாமல் பேனது, நிலமும் மாசடைந்தது.

இது குறித்து வழக்குகளும் நீதி மன்றத்தில் உள்ளது. இதனால் குளத்திற்கு நீர் வராமல், சீமை கருவேல மரங்கள் குளத்தினை ஆக்கிரமித்துள்ளது. வாய்க்காலும், புதர் மண்டி, மண் மூடி பல இடங்களில் அடையாளத்தை இழந்துள்ளது. 110 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தில் தற்போது 90 ஏக்கர் பரப்பளவில் வேலி முட்கள் மூடி  குளம் இருப்பதே தெரியாமல் உள்ளது. தற்போது பெய்த மழையினாலும், நொய்யல் தண்ணீர் சிறிதளவு வந்ததாலும் தற்போது 8 ஏக்கர் பரப்பில் தண்ணீர் தேங்கியுள்ளது. கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைத்தொடர்களில் மழை பெய்து நொய்யல் ஆற்றுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சென்றது. இது போல் மழைநீர் வரும் போது தண்ணீரில் உப்புத்தன்மை குறைவாக இருக்கும். அந்த தண்ணீரை குளத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் விவசாயிகள் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கத்தாங்கன்னி குளத்தில் தண்ணீர் தேக்கும் போது சுற்று வட்டாரத்தில் உள்ள 200 ஏக்கரில் பாசனம் பெற்று வந்தது. சுற்று வட்டாரப்பகுதியில் 1000 ஏக்கர் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஒரு முறை குளத்தை நிரப்பி விட்டால் ஆண்டு முழுவதும் தண்ணீர் பிரச்னை வராது. கால்நடைகள் வளர்க்கவும், விவசாயம் செய்யவும் முடியும். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக குளத்தை தூர் வாராமல் உள்ளனர். இதனால் குளம் இருப்பது தெரியாமல் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்களாக உள்ளது. தண்ணீர் வரும் வாய்க்கால் மூடி கிடக்கிறது. குளத்தில் உள்ள மதகுகளும் பழுதடைந்துள்ளது. கடும் வறட்சியால் நிலத்தடி நீர் மட்டம் அடி பாதளத்திற்கு சென்று தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, குடிப்பதற்கும், கால்நடைகளுக்கும் சிரமப்பட வேண்டியுள்ளது. இதனால் மழைக்காலங்களில், நொய்யலில் வரும் வெள்ளநீரை சேமிக்கும் வகையில், வாய்க்கால் மற்றும் குளத்தை தூர்வார வேண்டும். அதே போல், சீமைக்கருவேலன் மரங்களையும் அகற்ற வேண்டும். அரசு குடிமராமத்து பணிகள் நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில், கத்தாங்கன்னி குளத்தை மாவட்ட நிர்வாகமும். அதிகாரிகளும்  கண்டுகொள்ளாமல் உள்ளனர். இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குளத்தை தூர் வாரி வரும் மழை காலத்தில் மழை நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: