கோவை அரசு மருத்துவ கல்லூரியில் புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு

கோவை, ஆக. 20:  கோவை அரசு மருத்துவ கல்லூரியில் இதய அறுவைசிகிச்சை துறையில் புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி பாடப்பிரிவு துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., முதுகலையில் எம்.டி., எம்.சி.எச் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளது. இதில், எம்.சி.எச் எனப்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவில் தற்போது குழந்தைகள் நலப்பிரிவில் 4 இடங்கள், பிளாஸ்டிக் சர்ஜரி 2 இடங்கள், புற்றுநோயியல் அறுவை சிகிச்சையில் 4 இடங்கள் உள்ளன. புதிதாக இதய அறுவைசிகிச்சை துறையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு துவங்க மருத்துவ கல்லூரி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனையின் டீன் அசோகன் கூறுகையில், ‘‘இதய அறுவைசிகிச்சையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு துவங்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்த புதிய படிப்பிற்கு தற்போது எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் சார்பில் ஒப்புதல் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து, இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் புதிய படிப்பு துவங்க தேவையான வசதிகள் மருத்துவ கல்லூரியில் இருக்கிறதா என ஆய்வு நடத்தவுள்ளனர். இந்த ஆய்வுக்கு பின் புதிய படிப்பு துவங்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றார்.

Related Stories: