மாநில அளவிலான ஐவர் கால்பந்து நேரு கல்லூரி அணி சாம்பியன்

கோவை, ஆக. 20:கோவையில் நடந்த மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி, 20 வயதிற்குட்பட்டோர் போட்டியில்  நேரு கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கோவை ட்ரீம் லைட்ஸ் ஸ்போர்ட்ஸ் சார்பில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. இதில் கோவை, சென்னை, சேலம், நீலகிரி, கன்னியாகுமரி, ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, கண்ணூர், கோழிக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 80 அணிகள் பங்கேற்றன. செல்வபுரம் கிராஸ்பார் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் செயற்கை புல் மைதானத்தில் 10,13,15,17,20 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.

இறுதி போட்டியில் 10 வயது பிரிவில் கோவை எவரெஸ்ட் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோழிக்கோடு வி.டி சத்யம் சாக்கர் அணி வெற்றி பெற்றது. 13 வயது பிரிவில் கண்ணூர் எப்.சி ஸ்போர்ட்டிங் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஊட்டி விஸ்வசாந்தி அணி வெற்றி பெற்றது. 15 வயது பிரிவில் பாலக்காடு அலி பாலாய் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கண்ணூர் எப்.சி ஸ்போர்டிங் அணியும், 17 வயது பிரிவில் கோவைப்புதூர் சுகி எப்.சி அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஊட்டி ஹில்போர்ட் அணியும் வெற்றி பெற்றன. 20 வயது பிரிவில் பாலக்காடு அலி பாலாய் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோவை நேரு கல்லூரி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ட்ரீம் லைட்ஸ் ஸ்போர்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர்கள் சுல்தான், சேக் மற்றும் அர்ஷத் ஆகியோர் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினர். தொடரின் சிறந்த வீரராக தடாகம் அணி வீரர் வேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories: