சின்ன தடாகத்தில் செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கோவை, ஆக. 20:  கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் கலெக்டர் ராசாமணி தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.செங்கல் சூளைகளால் பாதிப்பு :  சின்னதடாகம் பகுதியை சேர்ந்த ரங்கராஜ் என்பவர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: சின்னதடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகள், தங்களுக்கு தேவையான செம்மண்ணை, இப்பகுதியில் அதிகளவில் வெட்டி எடுக்கின்றனர். இதனால் இங்குள்ள சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் 20 அடிக்கும் மேல் குழிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.  மேலும் செங்கல் சூளைகளுக்கு வரும் லாரிகள், மணல்களை எந்த பாதுகாப்பும் இல்லாமல் எடுத்து செல்வதால் புழுதி பறக்கிறது. அவை வீடுகளுக்குள் வருகிறது. செங்கல்களை காயவைக்க எரிக்கப்படும் புகையால் இந்த பகுதிகளில் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு, மக்கள் சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

பள்ளி கட்டடம் இடிப்பு :  தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நலச்சங்கம் பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜ் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கோவை மலுமிச்சம்பட்டி அருகே தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை 70 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள ஐந்து வகுப்பறைகளை இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர். இதனால் குழந்தைகள் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செட்டிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மயானம் பராமரிப்பு இல்லை :  கோவை மணியகாரம்பாளையம் பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கோவை மாநகராட்சி 41வது வார்டுக்குட்பட்ட மணியகாரம் பகுதியில் உள்ள மயானம் சுமார் 4 ஆண்டுகளாக எந்த பராமரிப்பும் இல்லாமல் உள்ளது. விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளதால் மக்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. இந்த மயானத்தை சீர்படுத்த வேண்டும். பட்டா கோரி மனு:  கோவை சூலூர் பகுதியை சேர்ந்த இனியன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை சூலூர் ஒன்றியம் பகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் அம்பேத்கர் நகர், காமராஜர்நகர் மற்றும் இருகூர் பேரூராட்சிக்குட்பட்ட காமாட்சிபுரம் நொய்யல்காலணியில் அருந்ததியர் இன மக்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கி இவர்களது வாழ்வாதாரத்தை காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: