பொது பயன்பாட்டு வாகனங்களில் கூடுதல் பயணிகளை ஏற்றினால் நடவடிக்கை

கோவை, ஆக.20: கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் ஆட்களை ஏற்றி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்து, சிற்றுந்து, ஆட்டோ, ஷேர் ஆட்டோ மற்றும் மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிக வேகமாகவும், அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி வருகின்றன. அதி வேகமாக இயக்கப்படும் வாகனங்களுக்கு முதல் முறை ரூ. 400 அபராதமும், இரண்டாவது முறைக்கு ரூ.1000ம் அபராதம் விதிக்க மோட்டார் வாகனச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

Advertising
Advertising

அதே போன்று அச்சுறுத்தும் வகையில் முதல் முறை வேகமாக வாகனத்தை இயக்கினால் ரூ.1000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்தக் குற்றத்தை மூன்று ஆண்டுகளுக்குள் மீண்டும் செய்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.2000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வாய்ப்புள்ளது. ஒப்பந்த ஊர்திகள் அனுமதிச் சீட்டின்படி, அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக ஆட்களை ஏற்றிச் சென்றால், நபருக்கு ரூ.100 வீதம் அபராதம் மற்றும் அனுமதிச் சீட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்துகளில் அதிக ஆட்களை ஏற்றிச் சென்றால், அதிகபட்சம் 30 நாள்களுக்கு வாகன உரிமம் தற்காலிகத் தடை அல்லது ரூ.9,000 வரை இணக்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் அதிக ஆட்கள் ஏற்றும் வாகனங்களை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து கோவை மைய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் கூறுகையில், ‘‘கோவை மாநகர எல்லையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் அதிக ஆட்களை ஏற்றி செல்வதாக புகார்கள் வருகிறது. அதிக ஆட்களை ஏற்றும் வாகனங்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை மூலமாக மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளிக்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.

Related Stories: