கனிராவுத்தர் குள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற கோரி மாநகராட்சியை முற்றுகையிட முடிவு

ஈரோடு, ஆக.20:  கனிராவுத்தர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றக்கோரி வரும் 22ம் தேதி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த குளம் மீட்பு இயக்கம் முடிவு செய்துள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான கனிராவுத்தர் குளம் சுமார் 52 ஏக்கர் பரப்பளவில் இருந்தது.கீழ்பவானி வாய்க்காலில் இருந்து வரும் கசிவு நீர் மற்றும் மழை நீர் சேகரிப்பு குளமானது மெல்ல ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்போது குளத்தின் பெரும் பகுதி காணாமல் போய்விட்டது. எனவே, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி குளத்தை மீட்டு புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதை வலியுறுத்தி கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கம் துவங்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியது. இதைத்தொடர்ந்து மாநரகாட்சி மூலம் குளம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் குளம் சீரமைப்பு என்ற பெயரில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக மாநகராட்சி நிர்வாகம் செயல்படுவதாகவும், குளத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்தி சாலை அமைக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.எனவே, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக்கோரியும், குளத்தின் ஒரு பகுதியில் சாலை அமைப்பதை தடுக்க கோரியும் வரும் 22ம் தேதி கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் அனைத்து கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுநல இயக்கங்கள் கலந்து கொள்ள உள்ளதாக குளம் மீட்பு இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: