விதி மீறுவோரிடம் அபராதம் வசூலிக்க போலீசாருக்கு நவீன இ-சலான் கருவி

ஈரோடு, ஆக.20:  ஈரோடு  மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறுவோர்களிடம் அபராதம் வசூலிக்க நவீன  வசதிகள் கொண்ட இ-சலான் கருவியை போலீசாருக்கு எஸ்பி சக்தி கணேசன்  வழங்கினார். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்  விதித்து அதை ரசீது மூலம் சீல் வைத்து வசூலித்து வந்தனர். இதில், பல்வேறு  முறைகேடு நடந்து வந்தது. இதைத்தடுக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய  இ-சலான் என்ற கருவி தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,  ஈரோடு மாவட்டத்தில் இ-சலான் கருவிகள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தும்  நிகழ்ச்சி எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், எஸ்பி சக்தி கணேசன்  கலந்து கொண்டு மாவட்டத்தில் உள்ள 5 போலீஸ் சப் டிவிசன்களான ஈரோடு,  பெருந்துறை, கோபி, பவானி, சத்தி ஆகிய பகுதிகளுக்கு முதற்கட்டமாக 30 இ-சலான்  கருவிகளை போலீசாருக்கு வழங்கினார்.மேலும், கருவியின் பயன்பாட்டினையும் நேற்று முதலே நடைமுறைப்படுத்தினார். இதுகுறித்து எஸ்பி சக்தி கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஈரோடு  மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் வழக்கு பதிவு செய்து, அபராதம்  வசூலிக்க நவீன வசதிகளுடன் கூடிய இ-சலான் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இ-சலான் கருவி தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து  அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விதிமீறலில்  சிக்கினால் அவர்களின் வாகன பதிவு எண்ணை இ-சலான் கருவியில் உள்ளீடு செய்தாலே  உரிமையாளர் பெயர், இன்சூரன்ஸ் காலாவதி தேதி, முந்தைய விதிமீறல் தொடர்பான  வழக்கு விவரம் வரை தெளிவாக அறிந்து கொள்ளலாம். விதிமீறல் தொடர்பாக ஒரே  நபர் பலமுறை சிக்கினால் அவர்களின் விவரங்கள் சிகப்பு நிறத்தில் தெரியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்த நபரின் ஓட்டுநர் உரிமத்தை  ரத்து செய்யவும் இந்த கருவியை கொண்டே பரிந்துரை செய்ய முடியும்.

இந்த  கருவியில் அபராதம் தொகையினை வாகன ஓட்டிகள் தங்களது டெபிட் கார்டு, கிரெடிட்  கார்டு போன்றவை மூலம் மட்டுமே செலுத்த முடியும். இந்த வசதி  இல்லாதவர்களுக்கு இ-சலான் கருவி மூலம் ரசீது வழங்கப்படும். அதை பயன்படுத்தி  எஸ்பிஐ வங்கியில் தங்களது அபராத தொகையினை செலுத்தி விடலாம். இதுமட்டுமின்றி  மத்திய போக்குவரத்து அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும்  echallan.parivahan.gov.in என்ற இணையதளம் மூலமும் ஆன்லைன் பேங்கிங் மூலம்  அபராதம் செலுத்தலாம். போலீசாரிடம் வாக்குவாதம் மற்றும் சர்ச்சைக்குரிய  நிகழ்வுகளை இக் கருவி மூலம் போட்டோ, வீடியோ எடுக்கும் வசதியும் உள்ளது. மேலும், இதில் ஜிபிஎஸ் வசதியும் உள்ளதால் போலீசார் எங்கு வாகன சோதனை  செய்கின்றனர். எவ்வளவு வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பதை கட்டுப்பாட்டு  அறையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு சக்தி கணேசன் கூறினார்.

Related Stories: