குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்

அந்தியூர், ஆக.20: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு ஆற்றுகுடிநீர், குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 5, 6, 7, 8, 9, 11 வார்டு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த 5 நாட்களாக ஆற்றுக் குடிநீர் விநியோகம் செய்யவில்லை. ஏற்கனவே, விநியோகிக்கப்பட்ட குடிநீர் செந்நிறமாக வருவதாகவும், சீரான குடிநீர் வழங்கக்கோரியும் அப் பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் கோபி, சத்தியமங்கலம் செல்லும் மூன்று ரோடு சந்திப்பில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பவானி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அத்தாணி கைகாட்டி பிரிவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மழை நீரில் சேறு சேர்ந்து செந்நிறமாக வருவதால் சுத்திகரிப்பு செய்யும் போது, அதன் வடிகட்டியில் சேறு, சகதி அடைத்துக் கொள்கிறது. இதனால், குடிநீர் தேவையான அளவு சுத்திகரிக்க முடியவில்லை. இது உடனடியாக சரிெசய்யப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். மறியலால் அத்தாணியில் இருந்து கோபி, சத்தியமங்கலம் செல்லும் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: