இரண்டாவது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை கோரி முதல் மனைவி போலீசில் புகார்

ஈரோடு, ஆக. 20:  இரண்டாவது திருமணம் செய்த விஏஓ மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல் மனைவி ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கொடுமுடி சாலைப்புதூர் கொல்லம்புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (33). இவர், ஈரோடு சூரம்பட்டி கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பணியாற்றி வருகிறார். இவருக்கும் பெரியகொடிவேரி பகுதியை சேர்ந்த  ஜமுனாதேவி (29) என்பவருக்கும் கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், ஜமுனாதேவி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எனக்கும், எனது கணவருக்கும் திருமணம் ஆன போது வரதட்சணையாக 50 பவுன் நகை, ரூ.50ஆயிரம் ரொக்கத்தை பெற்றோர் கொடுத்தனர். திருமணமான இரண்டரை ஆண்டாக அவரது பெற்றோருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். எனது மாமனாரும், மாமியாரும், கணவரும் எனக்கு குழந்தை இல்லை எனக்  கூறி கொடுமைப்படுத்தினர். கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து என் கணவர் வீட்டிற்கு சரியாக வருவதில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு என் கணவர் டீச்சர்ஸ் காலனி கண்ணகி வீதியில் உள்ள ஒரு வீட்டில் பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், நான் அங்கு சென்றேன். அப்போது அங்கிருந்த பெண்ணும், அவரது தங்கையும் என்னை திட்டி தாக்கினர். இதுகுறித்து சூரம்பட்டி போலீசில் புகார் அளிக்க சென்றேன். அங்கு போலீசார் கார்த்திகேயேனை அழைத்து விசாரணை நடத்தினர். அங்கு அவர் 2வது திருமணம் செய்ததை ஒப்புக்கொண்டார்.முதல் மனைவியாகிய என்னை விவாகரத்து செய்யாமல், வேறு பெண்ணை 2வது திருமணம் செய்து சட்ட விரோதமாக வாழ்ந்து வரும் சூரம்பட்டி விஏஓ.,வான  கார்த்திகேயன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் சூரம்பட்டி விஏஓ கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: