சாயக்கழிவு நீரை வெளியேற்றிய 5 ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு

ஈரோடு, ஆக. 20:  ஈரோடு அருகே சாயக்கழிவுநீரை வெளியேற்றியது தொடர்பாக ஐந்து ஆலைகளின் மின் இணைப்புகளை துண்டித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாயம், சலவை, பிரிண்டிங் மற்றும் தோல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில், சாயம், சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் பூஜ்ய நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மீண்டும் பயன்படுத்தி வருகின்றன. அதேபோல், பிரிண்டிங் தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அதில் சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தி வருகின்றன. தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுவதை தடுக்கும் வகையில் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி  வருகின்றனர். இதுதவிர, கலெக்டர் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் மூலமாக பூஜ்யநிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாக பராமரிக்காது கழிவுநீரை அருகில் உள்ள கால்வாயில் வெளியேற்றும் தொழிற்சாலைகளின் மின் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஈரோடு தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், 5 சாய, சலவை தொழிற்சாலைகள் பூஜ்யநிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாக இயக்காமல் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அருகில் உள்ள நீர்நிலைகளில் வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் கதிரவன் உத்தரவின்பேரில் 5 தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாயம், சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் பூஜ்யநிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், பிரிண்டிங் மற்றும் சைசிங் தொழிற்சாலைகள்சுத்திகரிப்பு நிலையத்தையும்  முறையாக இயக்கி சுற்றுச்சூழலையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும். தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகளை நீர்நிலைகளில் விதிமீறி வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: