×

கடம்பூர் அரசு பள்ளியில் விக்ரம் சாராபாய் பிறந்த நாள் விழா

கெங்கவல்லி, ஆக.20: கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை விக்ரம் சாராபாய் 100வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை வகித்து, விக்ரம் சாராபாய் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, அவர் பேசியதாவது: விக்ரம் ஆம்பாலால் சாராபாய் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் 12.8.1919ல் பிறந்தார். இவர் இளமையிலேயே இயற்பியலிலும், கணிதத்திலும் அதிக நாட்டம் கொண்டவராக விளங்கினார். பி.ஹெச்.டி ஆராய்ச்சியை இங்கிலாந்தில் முடித்த பிறகு, இயற்பியலுக்கான ஆராய்ச்சி ஆய்வகத்தை அகமதாபாத்தில் நிறுவினார்.

இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி குழு பேரவையின் தலைவராக இருந்து சிறப்பாக செயல்பட்டார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமாக  இருந்தார். இவருக்கு “சாந்தி ஸ்வரூப் பட்நாகர், பத்மபூஷன்  மற்றும் பத்ம விபூஷன்” ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. இவர், தனது 52வது வயதில் 30.12.1971ம் தேதி மறைந்தார்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மீனாம்பிகா அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். விழாவில் பள்ளி ஆசிரியைகள் ஜெயமணி, கல்பனா, தமிழ்ச்செல்வி மற்றும் பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர்.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்