×

தர்மபுரி மாவட்டத்தில் கொத்தடிமை, மனித கடத்தல்களை தடுக்க குழு அமைப்பு

தர்மபுரி, ஆக.20: தர்மபுரி மாவட்டத்தில் கொத்தடிமை மற்றும் மனித கடத்தல்களை தடுக்கும் வகையில், ஒன் ஸ்டாப் கிரிஸிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட சட்ட பணிகள் ஆணையம் மற்றும் இன்டர்நேசனல் ஜஸ்டிஸ் மிஷன் சார்பில், மனித கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு குறித்து கருத்தரங்கு நேற்று தர்மபுரி நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. கருத்தரங்கில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கந்தகுமார் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜ்குமார் வரவேற்றார். மனித கடத்தல் மற்றும் கொத்தடிமைகள் ஒழிப்பு குறித்து சமூக சேவகர் சாலமன் ஆன்டனி கருத்துக்களை தெரிவித்து பேசினார்.

கூட்டத்தில், கொத்தடிமை ஒழிப்பில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கொத்தடிமை மற்றும் மனித கடத்தல்களை தடுக்கும் வகையில் ஒன் ஸ்டாப் கிரிஸிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நீதித்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் துறை, சமூக சேவை நிறுவனங்கள் ஆகியன இணைந்து செயல்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் நீதிபதி ஜீவானந்தம், விபத்து தீர்ப்பாய நீதிபதி சீதாராமன், குடும்பநல நீதிபதி செல்வமுத்துக்குமாரி, சார்பு நீதிபதி சாந்தி, சிறப்பு சார்பு நீதிபதி மைதிலி, மாவட்ட உரிமையியில் நீதிபதி சாந்தி, விரைவு நீதித்துறை நடுவர், மாஜிஸ்திரேட்டுகள் செல்வராஜ், ரகோத்தமன், மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், சப் கலெக்டர் சிவனருள், டிஎஸ்பி ஸ்ரீதர் மற்றும்வழக்கறிஞர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் செய்திருந்தது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா