×

பாளையம்குட்டூரில் கோயில் நிலத்தில் பட்டா வழங்கியோர் மீது நடவடிக்கை

தர்மபுரி, ஆக.20: தர்மபுரி அருகே பாளையம் குட்டூர் கிராம மக்கள், நேற்று தர்மபுரி கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனு: நல்லம்பள்ளி அருகே பாளையம் குட்டூர் கிராமத்தில், 135 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயிலும், அதனுடன் கிணறு ஒன்றும் 121 சதுர மீட்டர் பட்டா நிலத்தில் உள்ளது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கோயில் நிலத்தை முறைகேடாக பட்டா பெற்றுள்ளனர். இது தொடர்பாக ஊர் பொதுமக்கள் சார்பில், கடந்த 2005ம் ஆண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தோம். விசாரணையில், முறைகேடாக வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கோயில் மற்றும் கிணறு பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட சொத்து என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாரியம்மன் கோயில் மற்றும் கிணறு உள்ள பொது சொத்தினை, தவறுதலாக வீட்டு மனை பட்டாவாக வழங்கியவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் ராமன் நகர், ஜெய்நகர் மற்றும் எர்ரங்காட்டு கொட்டாய், ஏமக்குட்டியூர் பகுதி மக்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் மழைநீர் செல்ல புதிதாக சிறிய தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டன. இந்த தரைப்பாலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததால், மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. எனவே கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அரூர் முருகன் கோயில் பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் பல நூற்றாண்டுகள் பழமையானது. இந்த கோயிலுக்கு வரும் மக்கள் தங்கி ஓய்வெடுக்க மடங்கள் மற்றும் பல குளங்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுக்கு முன்பு வரை இருந்த 4 குளங்களை, சிலர் ஆக்கிரமித்து, குளம் இருந்ததற்கான அடையாளங்களை அழித்துள்ளனர். இது தவிர கோயிலுக்கு சொந்தமான நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே, வரலாற்று சிறப்பு வாய்ந்த கோயில் குளங்களை மீட்டு, ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா