×

முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அமைச்சுப்பணியாளர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்

வேலூர், ஆக.20: தமிழகம் முழுவதும் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான அமைச்சுப்பணியாளர் பட்டியலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மக்களவை தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. தேர்தல் முடிந்து கலந்தாய்வு தொடங்கிய நிலையில் வேலூர் மக்களவை தேர்தல் காரணமாக மீண்டும் அப்பணி முடங்கியது. இந்நிலையில் அடுத்த மாதம் 16ம் தேதி பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் உட்பட பல்வேறு பாடங்களுக்கான 2 ஆயிரத்து 145 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக தமிழ் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளது. இதனால் 2019-20ம் கல்வி ஆண்டில் பிளஸ்1, பிளஸ்2 தேர்ச்சி வீதம் கடுமையாக சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப தேவையான தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் குறிப்பிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுவதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சு பணியாளர்களாக உள்ளவர்களில் தகுதிவாய்ந்தவர்களை முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பிறப்பித்த உத்தரவில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் அமைச்சுப்பணியாளர்களாக உள்ள தகுதிவாய்ந்தவர்களின் பட்டியலை உடனடியாக தயாரித்து வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. இப்பட்டியலை கொண்டு அவர்களை பொதுமாறுதல் கலந்தாய்வின் மூலம் பள்ளிகளில் பணி நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் அமைச்சுப்பணியாளர்களாக பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களை பட்டியலிடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Tags :
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு...