ஆம்பூர் அருகே தரமற்ற நிலையில் கட்டப்பட்டது 17 லட்சத்தில் கட்டிய புதிய கால்வாய் 3 மாதத்தில் இடிந்து விழுந்தது

ஆம்பூர், ஆக.20: ஆம்பூர் அருகே தரமற்ற நிலையில் 17 லட்சத்தில் கட்டப்பட்ட கால்வாய் 3 மாதத்தில் இடிந்து விழுந்தது. இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம் மின்னூர் பள்ளிவாசல் அருகே கடந்த 3 மாதத்திற்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. அப்போதைய பிடிஓ இந்த இடத்தை தேர்வு செய்து 17 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்படி பணிகள் தொடங்கி நடந்து வந்த நிலையில், தரமான முறையில் கால்வாய் கட்டப்படவில்லை என அப்பகுதி மக்கள், ஒன்றிய பொறியாளர், பிடிஓ மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் 180 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்த கனமழை காரணமாக புதிததாக கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் சுமார் 80 அடி நீளம் இடிந்து விழுந்தது. பலமுறை பொதுமக்கள் எச்சரித்தும், தரமான முறையில் கட்டப்படாததால் மக்களின் வரிப்பணம் 17 லட்சம் வீணாகி உள்ளது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், சம்பவ இடத்தை கலெக்டர் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், உடனடியாக தரமான புதிய கால்வாய் கட்டவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: