செங்கம் அருகே கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபருக்கு பட்டா வழங்கியதால் தாலுகா அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகை

செங்கம், ஆக.20: செங்கம் அடுத்த தாழையூத்து கிராமத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபருக்கு பட்டா வழங்கியதை கண்டித்து தாலுகா அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர். மேலும், ஒருவர் தீக்குளிக்க முயன்றாதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தாழையுத்து கிராமம் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபடவும், கோயிலை புதியதாக கட்டவும் முடிவு செய்து நேற்று அங்கு சென்று சுத்தம் செய்தனர். இதைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தன் பெயரில் பட்டா உள்ளது. எனவே, இங்கு யாரும் கோயில் கட்டக்கூடாது என்று கூறினாராம். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் செங்கம் தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

தகவலறிந்த செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த போலீசார், உடனடியாக பெட்ரோல் கேனை பிடிங்கி தீக்குளிப்பதை தடுத்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து முறையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர்.இதையேற்று, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், தாலுகா அலுவலகத்தில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED திருவண்ணாமலையில் `பேட்டரி ஆப்...