×

கண்ணமங்கலம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி மாணவர்களுடன் பொதுமக்கள் திடீர் மறியல்

கண்ணமங்கலம், ஆக.20: கண்ணமங்கலம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி மாணவர்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்படைந்து பரபரப்பாக காணப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த பள்ளக்கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும், குழியமாக உள்ளதால் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த மாதம் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், சாலையை சீரமைப்பதாக தெரிவித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், பள்ளிக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. மாணவ, மாணவிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் நேற்று காலை பள்ளக்கொல்லை-கண்ணமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சந்தவாசல் போலீசார், துணை பிடிஓ பாலாம்பிகை, விஏஓ மகாலிங்கம் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதற்கு, பொதுமக்கள், ‘கடந்த முறையும் இதுபோன்றுதான் கூறினீர்கள். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்' என்றனர். இதையடுத்து, துணை பிடிஓ பாலாம்பிகை ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குண்டும் குழியுமாக இருந்த பகுதியை மண் கொட்டி தற்காலிகமாக பள்ளி செல்லும் சாலையை சீரமைத்தார். இதையடுத்து, மறியலை கைவிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.

Tags :
× RELATED திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட...