கஞ்சா விற்பனையில் மாமூல் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்: அதிகாலையில் சத்தமின்றி மீட்பு

சென்னை: சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கர்ணன். இவரது மகன் விக்னேஷ்(19). பிளஸ் டூ முடித்து விட்டு சென்னை புறநகர் தாழம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் சயின்ஸ் 2ம் ஆண்டு படிக்கிறார்.  ஏரோநாட்டிக்கல் பிரிவில் பயிலும் மாணவர்கள் கண்டிப்பாக மாணவர் விடுதியில்தான் தங்கி படிக்க வேண்டும் என்பதால் கல்லூரிக்கு அருகிலேயே வீடு இருந்தாலும் விக்னேஷ் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் சக  மாணவர்களுடன் விக்னேஷ் தங்கி படித்ததாக கூறப்படுகிறது.  அறையில் உடன் தங்கியிருந்த ஆந்திரா மாணவர் ஜெகதீஷுடன் பழகியதில் விக்னேஷுக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆந்திராவில் இருந்து ஜெகதீஷ் கஞ்சாவை  மொத்தமாக எடுத்து வந்து சக மாணவர்களுக்கு சப்ளை செய்ய, அவர்கள் அதை சில்லறை விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஞாயிறன்று இரவு 10 மணிக்கு விக்னேஷை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘‘கஞ்சா வேண்டும்’’, என சிலர் கேட்டுள்ளனர். கஞ்சா தருவதற்காக விடுதியில் இருந்து வெளியே வந்த விக்னேஷை, சில மர்ம நபர்கள் காரில் அழைத்துச்  சென்றனர். நீண்ட நேரமாகியும் அறைக்குத் திரும்பாததால் பயந்து போன சக மாணவர்கள் விக்னேஷின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விக்னேஷின் தந்தை மற்றும் உறவினர்கள் விடுதியில் விசாரித்தனர். காரில் விக்னேஷ் சென்றதாக  செக்யூரிட்டி தெரிவித்தார். அதையடுத்து தாழம்பூர் மற்றும் சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வாகன சோதனை மேற்கொண்ட போலீசாருக்கு திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் வேளச்சேரி காமாட்சி மருத்துவமனை அருகே விக்னேஷ் இருப்பது தெரிய வந்தது. காலில் பலத்த காயத்துடன் இருந்த விக்னேஷை அங்கிருந்து  போலீசார் மீட்டனர். விசாரணையில், காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றவர்கள், ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் தர வேண்டும் என்றும், தினமும் இலவசமாக கஞ்சா சப்ளை செய்ய வேண்டும் எனவும் மிரட்டியதாக விக்னேஷ்  கூறினார். மேலும்,வேளச்சேரி, சேலையூர் இடையே வனப்பகுதியில் தன்னை அவர்கள் அடித்தும், காலில் கத்தியால் குத்தியும் இறக்கி விட்டுச் சென்று விட்டதாக அவர் கூறினார். விக்னேஷை கடத்தி சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி  வருகின்றனர்.

ஓ.எம்.ஆரில் கஞ்சா தாராளம்

சென்னையை ஒட்டிய புறநகர் பகுதிகளில் குறிப்பாக ஓ.எம்.ஆர். சாலையில் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புகைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையால்தான் போதைக்கு ஆட்படும் பல மாணவர்கள் செல்போன் திருட்டு,  செயின் திருட்டு போன்றவற்றில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கஞ்சா விற்பனையை தடுத்தாலே 75 சதவீத குற்றங்களை குறைத்து விட முடியும் என்றும் போலீசார் கூறுகின்றனர். பெரும்பாலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிலர்  மூலம் மொத்தமாக கஞ்சா சென்னைக்கு ரயில் மூலம் எடுத்து வரப்படுகின்றது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: