மனைவியை கொடுமை செய்த டாக்டருக்கு 6 மாதம் சிறை: மகளிர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கேரள மனைவியை கொடுமை செய்த, சென்னையை சேர்ந்த டாக்டருக்கு 6 மாத சிறை, 1000 அபராதம் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் லஸ் அவென்யூவை சேர்ந்தவர் டாக்டர் ஜார்ஜ்  ஆபிரகாம். இவர் கடந்த 2001ம் ஆண்டு கொச்சினை சேர்ந்த மினுசூசன் என்ற டாக்டரை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில் திருமணம் முடிந்த பின்னர் இருவரும் வெளிநாட்டிற்கு சென்று மருத்துவமனையில்  வேலை செய்து வந்துள்ளனர். மேலும், மினுசூசனை, ஜார்ஜ் திருமணமான முதல் நாள் முதலே சண்டை போடுவது, ஆபாசமாக பேசி அடிப்பது என்று சித்திரவாதை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது.  இருந்தும், ஜார்ஜ் வரதட்சணை கேட்டும், தவறாக பேசியும், மனைவியை கொடுமை செய்து வந்துள்ளார்.

திருமணத்திற்காக மினுசூசனுக்கு கொடுத்த நகை பணம் ஆகியவற்றை வைத்து ஜார்ஜ் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்தநிலையில், பிரிந்து வாழ்ந்து வந்த இருவரையும்  குடும்பத்தினர் சமரசம் செய்து, திரும்பவும் சேர்ந்து வாழ வைத்தனர். ஆனால், ஜார்ஜ் மீண்டும் ஆபாசமாக பேசுவது, சந்தேகப்பட்டு அடிப்பது என்று பல்வேறு கொடுமைகளை செய்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மினுசூசன்  மயிலாப்பூர் மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜார்ஜை கைது செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல், ஸ்ரீலேகா  ஆஜராகி வாதிட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ஜார்ஜ் ஆபிரகாமிற்கு 6 மாத சிறை தண்டனையும், ₹1000 அபரதாமும் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories: