×

நடுவக்கரை ஊராட்சி கருமாரப்பாக்கத்தில் தொட்டியை சுத்தம் செய்யாமல் குடிநீர் வினியோகம்

திருக்கழுக்குன்றம், ஆக. 20:  திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நடுவக்கரை ஊராட்சி, கருமாரப்பாக்கம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீரை ஏற்றி, பின்னர் பைப் லைன் மூலம் தெருக் குழாய்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 4 நாட்களுக்கு ஒரு முறை  குடிநீர் வினியோகம் செய்வதால், பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை. இதையொட்டி பல்வேறு பகுதிகளுக்கு சென்று, தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீர், செம்மண் நிறத்தில் இருக்கிறது. குடிநீர் தொட்டியை முறையாக சுத்தம் செய்யாமல் உள்ளதால், இரும்பு பைப்கள் துருப்பிடித்து, தண்ணீர் நிறம் மாறிவருகிறது என கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள், குழாயில் துணி வைத்து மறைத்து, வடிகட்டி பிடிக்கின்றனர். ஆனாலும், குடிநீரின் நிறம் மாறவில்லை. இதுபோன்ற குடிநீரை பயன்படுத்துவதால், பல்வேறு தொற்று நோய்கள் பரவுமோ என ெபாதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, ஊராட்சி நிர்வாகம், உடனடியாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து, துருப்பிடித்துள்ள பைப் லைன்களை மாற்றி அமைத்து, சுத்தமான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் பகுதியில் நீர் ஆவியாவதை...