×

தனியார் கார் தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் திடீர் உண்ணாவிரத போராட்டம்

பெரும்புதூர், ஆக.20: பெரும்புதூர் அருகே தனியார் கார் தொழிற்சாலை முன்பு, தொழிலாளர்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்புதூர் அருகே இருங்காட்டுகோட்டை சிப்காட்டில் செயல்பட்டு வந்த தனியார் தொழிற்சாலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன. இதில், தனியார் கார் தொழிற்சாலைக்கு, உதிரிபாகங்கள் தயாரித்து வந்த இந்த தொழிற்சாலையில் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். தனியார் தொழிற்சாலை மூடப்பட்டதால், தொழிலாளர்கள்  வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி இருங்காட்டுகோட்டை தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை முன்பு நேற்று தொழிலாளர்கள் திரண்டனர். அங்கு திடீரென தொழிற்சாலை முன்பு அமர்ந்து
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பாதுகாக்க, தமிழக அரசு முன் வந்து வேலை இழந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என கோஷமிட்டனர்.  அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் மாலையில் உண்ணாவிரதத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...