×

கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

திருவள்ளூர், ஆக. 20: கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த புதுச்சேரி கிராம மக்கள், 100க்கும் மேற்பட்டோர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட நந்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது புதுச்சேரி கிராமம். இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, போர்வெல் அமைத்து, மேல்நிலை தேக்கத் தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஊராட்சிக்கு,  ஊராட்சி செயலர் இல்லாததால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. விசாரித்தபோது, குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறு வற்றி இருந்தது தெரிந்தது. இதனால், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் கொண்டுவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், தெரு மின்விளக்குகள் எரிவதில்லை. அனைத்து தெருக்களும் குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை. இதில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், உட்கார்ந்து குடிநீர் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் டவுன் போலீசார் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர். ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...