×

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.16 கோடியில் குடிமராமத்து பணிகள் நடக்கிறது

திருவாரூர், ஆக.20 : திருவாரூர் மாவட்டத்தில் ரூ.16 கோடியில் குடிமராமத்து பணிகள் நடைபெறுகிறது. இதில் 60 சதவீத குடிமராமத்து பணிகள் நடைபெற்று முடிந்துள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.திருவாரூர் ஒன்றியம் மாங்குடி ஊராட்சிக்குட்பட்ட திருநெய்ப்பேர் வாய்க்கால் தூர்வாரும் பணியினை நேற்று கலெக்டர் ஆனந்த் மற்றும் அமைச்சர் காமராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் ரூ.16 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திற்கு ஐஏஎஸ்அலுவலர் அரவிந்த் நியமிக்கப்பட்டு அனைத்து பணிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, இந்த குடிமராமத்து பணிகள் என்பது மாவட்டத்தில் இதுவரையில் 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மேலும் வருடந்தோறும் நடைபெறும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ. 16 கோடி மதிப்பில் 48 பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதுவரையில் 30 பணிகள் எடுக்கப்பட்டு இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.இது மட்டுமின்றி கிளை வாய்க்கால்களான ஏ மற்றும் பி சேனல் வாய்க்கால்களும் முன்னுரிமை அளித்து தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. எனவே தற்போது கல்லணை திறக்கப்பட்டு நிலையில் இன்னும் 2 தினங்களுக்குள் கடைமடை பகுதி வரையில் நீர் சென்றடையும். இருப்பினும் இந்த தூர்வாரும் பணிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தொடர்ந்து பணிகள் நடைபெறும். இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...