மணல் திருட்டு தொடர்பாக சப் கலெக்டர் திடீர் ஆய்வு

வில்லியனூர், ஆக. 20:   வில்லியனூர் அருகே உள்ள சேந்தநத்தம் சங்கராபரணி ஆற்றில் சப்கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டு புகைப்படம் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  வில்லியனூர் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றில் தினந்தோறும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வருவாய் துறை மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் மணல் கொள்ளையை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், ஒதியம்பட்டு காஸ் பிளாண்ட் அருகில் பள்ளம் தோண்டி மணல் எடுக்கப்பட்டதில் 15 அடிக்கு மேல் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிளாண்ட் சுவர் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த வருவாய் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் தலைமையில் சிறப்பு அதிரடி போலீசார் திடீரென ஒதியம்பட்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மணல் திருட்டில் ஈடுபட்ட 30 தொழிலாளர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 19 மாட்டு வண்டிகளை பறிமுதல் ெசய்தனர். இதனால் மணல் கொள்ளையர்கள் அச்சத்தில் இருந்து வந்தனர்.  தற்போது ஆரியப்பாளையம், சேந்தநத்தம், கூடப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றில் தண்ணீர் உள்ளதால் மிதவை மூலம் நூதன முறையில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆரியப்பாளையம், சேந்தநத்தம் பகுதியில் ஆற்றில் மார்பளவு தண்ணீர் இருப்பதால் இரும்பு மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட 8 முதல் 15 வரையிலான பேரல்களை ஒன்றிணைத்து அதன் மீது பலகைகளை போட்டு மிதவை அமைத்துள்ளனர். பிறகு அதை ஆற்றின் நடுவே கொண்டு சென்று சவுல் மற்றும் கூடை மூலம் தண்ணீரிலிருந்து மணலை அள்ளிப்போட்டு மீண்டும் கரைக்கு கொண்டு வந்து குவிக்கின்றனர்.

 இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 வரையிலான மணல் லோடுகளை டிப்பர் லாரியால் கொண்டு செல்கின்றனர். இந்த பணியில் உள்ளூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட தமிழக பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் வில்லியனூர் சப்கலெக்டர் சஷ்வத் துர்சாவத் திடீரென சேந்தநத்தம் சங்கராபரணி ஆற்றுப்படுகை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.  இதனைக் கண்ட மணல் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பிறகு வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  பின்னர் அங்கிருந்த மிதவைகளை பறிமுதல் ெசய்து அழிக்குமாறும், மணல் கொள்ளையர்கள் பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்து அவற்றின் உரிமையாளர் மீது வழக்கு பதிந்து வண்டியின் உரிமைத்தை ரத்து செய்யுமாறும் உத்தரவிட்டார். அங்கிருந்த 16 மிதவைகளை கைப்பற்றி பொக்லைன் இயந்திரம் மூலம் அழித்தனர். பிறகு அங்கு குவிக்கப்பட்டிருந்த 6 யூனிட் மணலை பறிமுதல் செய்தனர்.

Related Stories: