மாணவரணி நிர்வாகி விசிசி நாகராஜன் ராஜினாமா

புதுச்சேரி,  ஆக. 20:   புதுவை மாநில அதிமுக மாணவரணி நிர்வாகி விசிசி நாகராஜன் திடீரென  கட்சியில் இருந்து விலகியுள்ளார்.  புதுச்சேரி,  முதலியார்பேட்டையை சேர்ந்தவர் விசிசி நாகராஜன் அதிமுகவில்  இருந்து ஓரம் கட்டப்பட்டார். தொகுதி எம்எல்ஏ பாஸ்கரின் ஆதரவாளர்கள் மறைமுக மிரட்டல் விடுத்து வந்தனர். தொடர்ந்து  தொல்லை கொடுத்ததால் அதிமுகவில் இருந்து விலக முடிவு செய்திருந்தார்.  இந்நிலையில் அதிமுக மாணவர் அணி தலைவர் பதவியிலிருந்து மட்டுமின்றி கட்சியின்  அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விசிசி நாகராஜன் அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அதிமுக சென்னை தலைமை  அலுவலகத்துக்கும், புதுச்சேரி தலைமை அலுவலகத்துக்கும் அனுப்பியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவை  அதிமுக மாணவர் அணி தலைவராக செயல்பட்டு வந்தேன்.  ஜெயலலிதா காலத்தில்  சீரிய  முறையில் மக்கள் பணியாற்றினேன்.  கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக  அதிமுகவில் பணியாற்றி வந்தேன். தற்போது சூழ்நிலை சரியில்லாத காரணத்தாலும், சில காரணங்களாலும்,  கனத்த இதயத்துடன் அதிமுகவிலிருந்து மாணவரணி தலைவர் பதவியையும், அடிப்படை  உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன்.

 தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், புதுவை செயலாளர்  புருஷோத்தமன், முன்னாள் செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்திசேகர்  மற்றும் அதிமுக பல்வேறு அணியினர், தொண்டர்களுக்கும் நன்றிகூற  கடமைப்பட்டுள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் சென்னை தலைமை  அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் விலகிவிட்ட  நிலையில் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தனது ஆதரவாளர்களுடன்  விசிசி நாகராஜன் ஆலோசனை நடத்தி விரைவில் முடிவை அறிவிப்பார் என  எதிர்பார்க்கப்படுகிறது. அவர் விரைவில் பாஜகவில் சேர இருப்பதாகவும்  நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: