குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை

விழுப்புரம், ஆக. 20: குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி கிராம மக்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக்கூட்டம் நடந்தது. ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையிலான அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். அப்போது விழுப்புரம் அருகே வேடம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதனைத்தொடர்ந்து அக்கிராம மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:வேடம்பட்டு கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த இரண்டரை ஆண்டுக்கு மேலாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு 600 அடி போர் போடப்பட்டும் அடிக்கடி மின்மோட்டார் பழுதாகி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மேலும் எங்கள் ஊரில் உள்ள 3 மினிடேங்க் மோட்டாரும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதாகி கிடக்கின்றன. இதனை சரிசெய்ய வேண்டும். மேலும் வேடம்பட்டிலுள்ள அனைத்து கைப்பம்புகளும் பழுதாகி கிடக்கிறது. இதனால் தினமும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அருகிலுள்ள கிராமங்களுக்கும், வயல்வெளி மோட்டார்களுக்கும் சென்று குடிநீர் பிடித்துவரும் நிலை உள்ளது. இது குறித்து கோலியனூர் வட்டாரவளர்ச்சி அலுவலரிடம் மனுஅளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊராட்சி செயலாளரும், வேடம்பட்டில் நிலவும் குடிநீர் பிரச்னையை கண்டுகொள்வதில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: