போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு

சின்னசேலம், ஆக. 20:போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், கச்சிராயபாளையம் பஸ்நிலையத்தில் இருந்து அக்கராயபாளையம் மும்முனை சந்திப்புவரை சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிராயபாளையம் வளர்ந்து வரும் நகரமாகும். கச்சிராயபாளையத்தில் இருந்து கல்வராயன்மலை போன்ற மலை கிராமங்களுக்கும், மண்மலை, மாத்தூர், கொசப்பாடி போன்ற கிராமங்களுக்கும், சேலம், சென்னை, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் போன்ற பெருநகரங்களுக்கும் தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி பேருந்துகளும் அதிகளவில் இயக்கப்படுகின்றன. ஆனால் பேருந்துகள் வந்து செல்வதற்கு ஏற்ப தார்சாலை அகலமாக இல்லை. கச்சிராயபாளையம் பஸ்நிலையத்தில் இருந்து அக்கராயபாளையம் மும்முனை சந்திப்பு வரை சாலையின் இருபுறமும் தனிநபர் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினரால் குறியீடு செய்யப்பட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. மேலும் கச்சிராயபாளையம் சாலையில் பகல் நேரத்திலேயே சரக்கு வாகனங்கள் நின்று கொண்டு சரக்குகளை இறக்குகின்றனர்.

அதைப்போல நெல் ஏற்றி வரும் வாகனங்களும், வைக்கோல், கரும்பு ஏற்றி வரும் வாகனங்களும் பகல் நேரத்தில் நகருக்குள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி துவங்கும் நேரம், பள்ளி முடிவடையும் நேரங்களில் மாணவ, மாணவிகள் படும் துன்பங்கள் சொல்லிமாளாது. எனவே இப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்தை சரிசெய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் கச்சிராயபாளையத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: