போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி, ஆக. 20: தியாகதுருகம் அருகே கரகாட்ட கலைஞரை தாக்கிய போலீஸ்காரரை கிராம மக்கள் பதிலுக்கு தாக்கினர். மேலும் போலீசாரை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தியாகதுருகம் அடுத்த நாகலூர் கிராம காலனி பகுதியில் சுமார் 1000க்கும்  மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் கடந்த 14ம்தேதி  பெரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அதனையெட்டி சாமி ஊர்வலம்  நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாமி ஊர்வலத்துடன் கரகாட்ட  நிகழ்ச்சி நடந்தது அங்கு வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும்  காவல்நிலைய எழுத்தர் சிவமுருகன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  இருந்தனர். சுமார் அதிகாலை 1.30 மணியளவில் கரகாட்ட குழுவினர் அரசியல்  கட்சியின் பாட்டுப்பாட முயன்றுள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த  போலீசார் எந்த அரசியல் கட்சி பாட்டும் பாடக்கூடாது, பொதுவான பாட்டு மட்டும்  பாடுங்கள் என கூறியுள்ளனர். இதையடுத்து கிராமத்தில் சாராயம் விற்பதாகவும், போலீஸ்  லஞ்சம் வாங்குவதாகவும் கிண்டல் அடித்து கரகாட்ட குழுவினர் பேசினர். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் சிவமுருகன் கரகாட்டத்தை நிறுத்தி  கரகாட்ட கலைஞர் சுதாகரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கிராம இளைஞர்கள் சிலர்  போலீசாருடன் வாக்குவாதம் செய்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ்  பைக்கை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதனை தடுக்க முயன்ற போலீஸ்காரர் சிவமுருகனை கிராம  இளைஞர்கள் அசிங்கமாக திட்டி சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.இதில் சிவமுருகன் படுகாயமடைந்தார். இதேபோல் சிவமுருகன் தாக்கியதில் கரகாட்ட கலைஞர் கண்டாச்சிமங்கலம் கிராமத்தை சேர்ந்த  சுப்ரமணி மகன் சுதாகர்(25) படுகாயமடைந்தார். இவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அதிகாலை சுமார் 5  மணியளவில் நாகலூர் கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மினி  டெம்போவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று  வரும் போலீஸ்காரரை தாக்க முயன்றுள்ளனர். அப்போது மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஊர்  முக்கியஸ்தர்கள் இளைஞர்களை சமாதானம் செய்து திருப்பி அனுப்பி  வைத்துள்ளனர்.    இந்நிலையில் கரகாட்ட நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி  கரகாட்ட கலைஞர் சுதாகரை தாக்கிய போலீஸ் ரைட்டர் சிவமுருகன் மீது நடவடிக்கை  எடுக்க கோரி நாகலூர் கிராம காலனி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள்  திரண்டு வந்து நேற்று அதிகாலை 5.30 மணியளவில் காலனி பஸ் நிறுத்த பகுதியில்  கள்ளக்குறிச்சி-கூத்தக்குடி செல்லும் சாலையில் திடீர் மறியலில்  ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன்  தலைமையில் தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள்  ஏழுமலை, பாலமுரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம்  சமாதானம் செய்தனர்.

 ேமலும் நடந்த சம்பவங்கள் குறித்து டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டார். அப்போது கிராம மக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  கரகாட்ட கலைஞரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை  எடுப்பதாக டிஎஸ்பி ராமநாதன் உறுதியளித்தார். அதனையேற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல்  போராட்டத்தால் அப்

பகுதியில் ஒன்றரை மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.   

Related Stories: