×

49 ஆயிரம் பேர் கையெழுத்து ஆட்சியரிடம் இந்திய கம்யூ. ஒப்படைப்பு

கடலூர், ஆக. 20:    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக்குழுவினர் கடந்த ஆகஸ்ட் 1 முதல் 15ஆம் தேதி வரை கடலூர் மாவட்டத்தில் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என 49 ஆயிரம் பேர் கையொப்பமிட்டனர். இந்த கையெழுத்துக்களை கடலூர் ஆட்சியர் அன்புசெல்வனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கடலூர் மஞ்சக்குப்பம் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகம் சென்று கையெழுத்துகளை ஒப்படைத்தனர். அத்துடன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் நிரந்தரமாக தடை செய்து அரசாணை வெளியிட வேண்டும். இத்திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். காவிரி டெல்டாவை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவும் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் மாவட்ட செயலர் துரை தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக்குழு மணிவாசகம், மாவட்ட துணை செயலாளர்கள் குளோப், காசிலிங்கம், மாவட்ட பொருளாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது பெட்டியில் வைத்து வழங்கப்பட்ட கையெழுத்துக்களுடன் கூடிய மனுக்களை பெறுவதற்கு ஆட்சியர் அன்புச்செல்வன் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் கையெழுத்திட்டது. இதனை பெற்றே தீர வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதையடுத்து மூடப்பட்டிருந்த பெட்டியை திறந்து மனுக்களை பார்வைக்கு காட்டுமாறு ஆட்சியர் கூறினார். பின்னர் கட்சி நிர்வாகிகள் பெட்டியை திறந்து காட்டினர். அவற்றை பார்த்த பின்னர் ஆட்சியர் பெற்றுக்கொண்டார். அப்போது கடலூர் மாவட்டத்தில் பெறப்பட்ட 49,000 கையெழுத்துகளையும், மனுக்களையும் அரசுக்கு அனுப்புமாறு கட்சி நிர்வாகிகள் ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டனர்.


Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்