×

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வங்கி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

கடலூர், ஆக. 20: நாட்டின் பொருளாதாரத்தை ரூ.360 லட்சம் கோடியாக மேம்படுத்துவதற்கான, புதிய யுக்திகளை வகுப்பதற்கான வங்கி அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட இந்தியன் வங்கி அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், இந்தியன் வங்கி கடலூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், இந்தியன் வங்கியின் சென்னை களப்பொது மேலாளர் சந்திரா ரெட்டி தலைமை தாங்கி பேசுகையில், பொதுத்துறை வங்கிகளின் சீர்திருத்த நடவடிக்கைகளின் அடுத்தபடியாகவும் வரும் 2025ம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தை ரூ.360 லட்சம் கோடியாக மேம்படுத்துவதற்காகவும், மத்திய அரசின் நிதிசார் சேவைகள் துறை, பல்நிலை ஆலோசனை கூட்டங்கள் மாவட்ட அளவில் துவங்கப்பட்டுள்ளது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த வங்கி மேலாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தேசிய முன்னுரிமை திட்டங்களான, ஸ்டாண்ட் அப் இந்தியா, முத்ரா கடன், விவசாய கடன், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், மகளிர் முன்னேற்றம், அனைவருக்கும் வங்கி சேவைகள், பணமில்லா மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட 16 தலைப்புகள் அளிக்கப்பட்டு அது குறித்த விரிவான ஆலோசனை நடைபெற்றது.இக்கூட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதார கொள்கைகளை பின்பற்றும் வண்ணம், பல உபயோகமான யுக்திகளும், யோசனைகளும் பெறப்பட்டுள்ளன. அவற்றில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் செயல்படுத்தக்கோரி உடனடியாக அமல்படுத்தப்படும். வரும் 23ம் தேதி புதுச்சேரியில் இது போன்ற ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது என்றார். கடலூர் மண்டல மேலாளர் விஜயலஷ்மி முன்னிலை வகித்தார். கடலூர் துணை மண்டல மேலாளர் சேகர் மற்றும் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...