×

குண்டும், குழியுமாக மாறிய சி.சாத்தமங்கலம் -ஓடாக்கநல்லூர் சாலை

சேத்தியாத்தோப்பு, ஆக. 20:சேத்தியாத்தோப்பு அருகே சி.சாத்தமங்கலம் - ஓடாக்கநல்லூர் இணைப்பு சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு அருகே மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சி.சாத்தமங்கலம், வெள்ளியக்குடி, ஓடாக்கநல்லூர், வடபாக்கம் ஆகிய நான்கு கிராம பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் இந்த இணைப்பு சாலை பிரதான சாலையாக இருந்து வருகின்றது. இந்த இணைப்பு சாலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. தற்போது ஜல்லிகள் பெயர்ந்து மண் சாலையாக மாறியுள்ளது. இதனால் விவசாயிகள் விளைவிக்கும் நெல், கரும்பு போன்றவைகளை குறித்த நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் நான்கு கிராம விவசாயிகளும் பெரும் அவதியடைந்து வருகின்றனர். சாத்தமங்கலத்திலிருந்து ஓடாக்கநல்லூர் செல்லும் சாலையிலே வெள்ளியக்குடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தான் சாத்தமங்கலம் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று பேருந்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைவதோடு வாகனங்கள் பஞ்சராகி, பழுதாகி வருகின்றது என தெரிவிக்கின்றனர். இந்த சாலை வழியே பேருந்துகள் இயக்கமும் கிடையாது என்றும், இதுகுறித்து பல முறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து விரைந்து புதிய தார்சாலையை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி