×

திருச்சுழியில் உள்ள குண்டாற்றில் ஆடி தபசு திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சுழி, ஆக. 14: திருச்சுழியில் உள்ள குண்டாற்றில் ஆடி தபசு திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருச்சுழியில் ஆடி தபசு விழாவை முன்னிட்டு நேற்று மாலை குண்டாற்று படுகையில் திருமேனிநாதருக்கும், துணைமாலையம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. திருச்சுழியில் உள்ள ராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானம் பாத்தியப்பட்ட துணைமாலையம்மன் சமேத திருமேனிநாதர் திருக்கோவிலில் கடந்த 4ம் தேதி ஆடி தபசு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தபசு விழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மன், கிளி, குதிரை, அன்னம், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் அலங்காரத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில் 10ம் நாள் நிகழ்ச்சியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் துணைமாலையம்மனுக்கும், திருமேனிநாதருக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி குண்டாற்று பகுதியில் நடைபெற்றது.  

இது குறித்து திருச்சுழி பட்டர் கூறுகையில்: திருச்சுழிக்கு கிழக்கே தென்வடலாக ஓடும் குண்டாற்று படுகையில் சிவன் நாராயணன் பிள்ளை தபசு மண்டபத்தில் நேற்று முன்தினம் காலையில் துணைமாலையம்மன் தபசு கோலத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். துணைமாலையம்மன் தபசு மண்டபத்தில் திருமேனிநாதரை அடைவதற்காக தவம் மேற்கொள்வதாகவும், அன்று மாலை திருமேனிநாதர் ரிஷப வாகனத்தில் அம்மனுக்கு காட்சி தந்து ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருமேனிநாதர் ரிஷப வாகனத்தில் சென்று அம்மனை சாந்தம் செய்து குண்டாற்றில் திருமேனிநாதருக்கும், துணைமாலையம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் தீபாராதனை நடைபெற்ற பின்பு தபசு மண்டபத்தில் இருவருக்கும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. அம்பாள் பூரண சந்தோசத்துடனும், பகவான் மனைநிறைவோடும் மக்களுக்கு அருள்பாலித்து, ஆடி தபசு காணவரும் பக்தர்கள் பிரச்சனை தீர்வதாகவும், திருமண தடை நீங்குவதாகவும், குழந்தை பாக்கியம் தடை நீங்குவதாகவும் பக்தர்கள் நம்பி வழிபடுகின்றனர். இறுதி நிகழ்ச்சியாக திருமேனிநாதர், துணைமாலையம்மன் வீதி உலா சென்று திருக்கோவிலை சென்றடைகின்றனர்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை